Last Updated : 21 Sep, 2022 05:41 PM

 

Published : 21 Sep 2022 05:41 PM
Last Updated : 21 Sep 2022 05:41 PM

ஜிப்மரில் தொடரும் பற்றாக்குறை: கையிருப்பு மருந்து, மாத்திரைகளை மட்டும் பரிந்துரைக்க சுற்றறிக்கை

ஜிப்மர் வளாகத்திலுள்ள பார்மசியில் பணம் தந்து மாத்திரை வாங்க நிற்கும் ஏழை மக்கள்.

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடரும் மருந்து பற்றாக்குறையால் கையிருப்பில் உள்ள மருந்துகளை மட்டும் பரிந்துரைக்க அனைத்து துறைகளின் டாக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கோரிமேடு பகுதியில் அமைத்துள்ளது ஜிப்மர் மருத்துவமனை. மத்திய அரசின் கட்டுபாட்டில் இந்த மருத்துவமனை இயங்கி வருகிறது. கரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த இரு ஆண்டுகளாக வெளிப்புறச் சிகிச்சைகள் தொடர்ச்சியாக தரப்படாத சூழல் நிலவியது. தொலைபேசியில் முன்பதிவு செய்து அதன்பிறகே சிகிச்சைக்கு வரவேண்டிய நிலை இருந்தது.

இரு ஆண்டுகளாக தொற்றா நோய்களான நீரிழிவு நோய், மனநோய், இதய நோய், நரம்பியல், இதய அறுவை சிகிச்சை நோயியல், நரம்பு அறுவை சிகிச்சை நோயியல், சிறுநீரகவியல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, புற்றுநோய் ஆகியவற்றுக்கு சிகிச்சையில் உள்ளோருக்கும் மாதந்தோறும் இலவசமாக தரவேண்டிய மருந்து மாத்திரைகளை ஜிப்மர் நிறுத்தியதால் பலர் பாதிக்கப்பட்டனர். தற்போது மீண்டும் சிகிச்சைகள் தொடங்கினாலும் மாத்திரைகள் பற்றாக்குறை ஓராண்டை கடந்தும் நிலவுகிறது.

புதுச்சேரி, தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து சிகிச்சைக்கு வருவோருக்கு அத்தியாவசிய மாத்திரைகள் கையிருப்பில் இல்லை என்று வெளியில் வாங்க சொல்கின்றனர். இதையடுத்து புதுச்சேரி அரசு, மத்திய சுகாதாரத்துறை தரப்பில் நேரில் வந்து ஆய்வு செய்து இப்பிரச்சினை சரிசெய்யப்படும் என்று உறுதிதரப்பட்டது. ஆனால் இன்னும் சரியாகவில்லை.

நோயாளிகளுக்கு டாக்டர்கள் எழுதி தரும் மருந்துகள் பெற வரிசையில் நின்று மருந்து சீட்டை காட்டினால், அம்மருந்துகள் இல்லை என்று தெரிவிப்பதால் வெளியில் வாங்கும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் அதிகளவில் புகார்கள் தொடர்கின்றன.

ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர் அனைத்து துறைத்தலைவர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், "மருத்துவத்துக்கு பிறகு தரப்படும் மருந்து சீட்டில் ஜிப்மர் மருந்தகத்தில் கிடைக்கும் மருந்துகளை மட்டும் பரிந்துரையுங்கள். இங்கு இல்லாத அத்தியாவசிய மருந்தை வெளியில் பணம் செலுத்தி வாங்கிக்கொள்ளுமாறு குறிப்பிட்டு தனிச்சீட்டில் எழுதி தாருங்கள். மருந்தகத்தில் உள்ள மருந்து பட்டியல் துறைகளுக்குதரப்படும். டாக்டர்கள் எழுதி தரும் மருந்துகள் பெற மருந்தகத்தில் வரிசையில் நின்று கிடைப்பதில்லை என்று புகார்கள் வருவதால் இச்சுற்றறிக்கை தரப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x