Published : 21 Sep 2022 11:11 AM
Last Updated : 21 Sep 2022 11:11 AM

தமிழகத்தின் வளர்ச்சிக்கு அந்நிய முதலீடுகள் அதிகம் தேவை: அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ் | கோப்புப்படம்

சென்னை: "தமிழகத்தின் வளர்ச்சிக்கு அந்நிய முதலீடுகள் அதிகம் தேவை. இதற்காக பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருவதைப் போல தமிழகத்தை 5 தொழில் முதலீட்டு மண்டலங்களாக பிரித்து, ஒவ்வொன்றுக்கும் ஒரு முதலீட்டு ஆணையரை நியமித்து அதிக முதலீட்டை ஈர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "2022-23 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தமிழகத்திற்கு வந்த நேரடி அந்நிய முதலீடுகளின் மதிப்பு ரூ.5836 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் பெறப்பட்ட ரூ.5640 கோடியை விட ரூ.196 கோடி அதிகம் தான் என்றாலும் தமிழகத்தின் வளர்ச்சிக்கும், திறனுக்கும் போதுமானதல்ல.

இதே காலத்தில் மராட்டியம் ரூ.40,386 கோடி (31.59%), குஜராத் ரூ.24,692 கோடி(19.31%), கர்நாடகம் ரூ.21,480 கோடி (16.80%), டெல்லி ரூ.17,988 கோடி (14%) அந்நிய முதலீட்டை ஈர்த்துள்ள நிலையில், தமிழ்நாடு 4.46% மட்டுமே ஈர்த்திருக்கிறது; ஐந்தாவது இடத்தையே பிடித்திருக்கிறது.

2019 அக்டோபர் முதல் கடந்த ஜூன் வரையிலான சுமார் மூன்றாண்டுகளில் ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு ரூ.52,676 கோடி (4%) மட்டுமே அந்நிய முதலீட்டை ஈர்த்துள்ளது. இதிலும் மராட்டியம், கர்நாடகம், குஜராத், டெல்லி ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக ஐந்தாவது இடத்தில் தான் உள்ளது.

இந்தியாவில் ஒட்டுமொத்த மாநில உற்பத்தி மதிப்பில் மராட்டியத்திற்கு அடுத்தபடியாக தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது; தமிழகத்தில் மிகச்சிறந்த மனிதவளம் உள்ளது. இந்தக் காரணிகளின்படி பார்த்தால் அந்நிய முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் முதல் இரு இடங்களுக்குள் வந்திருக்க வேண்டும்.

தமிழகத்தின் வளர்ச்சிக்கு அந்நிய முதலீடுகள் அதிகம் தேவை. இதற்காக பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருவதைப் போல தமிழகத்தை 5 தொழில் முதலீட்டு மண்டலங்களாக பிரித்து, ஒவ்வொன்றுக்கும் ஒரு முதலீட்டு ஆணையரை நியமித்து அதிக முதலீட்டை ஈர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x