Published : 21 Sep 2022 06:16 AM
Last Updated : 21 Sep 2022 06:16 AM

சட்டப்பேரவை கூட்டத் தொடரை அக்டோபரில் நடத்த திட்டம் - அலுவல் ஆய்வு கூட்டத்துக்கு பிறகு தேதி அறிவிக்கப்படும்

சென்னை: சட்டப்பேரவை மழைக்கால கூட்டத் தொடரை அக்டோபர் 2 அல்லது 3 வாரத்தில் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்துக்குப் பிறகு, இதற்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் ஜனவரி 5-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரை மீது ஜன. 6, 7-ம் தேதிகளில் விவாதம் நடத்தப்பட்டது. பின்னர், 2022-23-ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை மார்ச் 18-ம் தேதி நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், மார்ச் 24-ம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடத்தப்பட்டது.

மார்ச் இறுதியில் அலுவல் ஆய்வுக் குழு கூடி, ஏப்ரல் 6-ம் தேதி முதல் மே 10-ம் தேதி வரை துறைகள்தோறும் மானியக் கோரிக்கை தொடர்பான விவாதம் நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டது. அதன்படியே, விவாதம் நடத்தி முடிக்கப்பட்டது.

சட்டப்பேரவை விதியின்படி, ஒரு பேரவைக் கூட்டம் முடிந்து அடுத்த 6 மாதங்களுக்குள் அடுத்த கூட்டம்நடத்தப்பட வேண்டும். அதன்படி, வரும் நவ. 10-ம் தேதிக்குள் பேரவைக் கூட்டத்தைநடத்த வேண்டிய அவசியம் அரசுக்கு உள்ளது.

இதையடுத்து, இதற்கானபணிகளை சட்டப்பேரவைச் செயலகம் தொடங்கியுள்ளது.

சமீபத்தில் பேரவை உறுப்பினர்கள் இருக்கை அமைப்புதொடர்பாக பொதுப்பணித் துறையினருடன், சட்டப்பேரவைச் செயலகம் ஆலோசனை நடத்தியுள்ளது.

இந்நிலையில், சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடரை வரும் அக்டோபர் 2 அல்லது 3-வது வாரத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அக்டோபர் முதல் வாரத்தில் ஆயுத பூஜை, விஜயதசமி வருவதாலும், அக்டோபர் 4-வது வாரத்தில் தீபாவளிப் பண்டிகை என்பதாலும், இடைப்பட்ட காலத்தில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை நடத்தி முடிக்கதிட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சட்டப்பேரவைக் கூட்டத்தைப் பொருத்தவரை, ஏற்கெனவே முதல்வர் அறிவித்தபடி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் சம்பவம் தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பான ஆணையத்தின் அறிக்கை ஆகியவை தாக்கல் செய்யப்பட உள்ளன.

அத்துடன், ஆன்லைன் ரம்மியை தடை செய்வது தொடர்பான மசோதாவும் தாக்கல் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x