Published : 21 Sep 2022 06:03 AM
Last Updated : 21 Sep 2022 06:03 AM
சென்னை: மத்திய உள்துறை அமித் ஷாவை சந்தித்த அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் பழனிசாமி, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பில் மாநில அரசு மெத்தனம் காட்டுவதாகப் புகார் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 11-ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். மேலும், ஓபிஎஸ் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டு, முடிவு எடுக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. அதேபோல, ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தொடர்ந்துள்ள வழக்கும் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவில் வழக்கு ஒன்றில் பழனிசாமியின் உறவினர் சிக்கியுள்ளார். இதையடுத்து, சமீபத்தில் பிரதமரை சந்திக்க பழனிசாமி முயன்றார். இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில், பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லிக்குச் சென்றார். அங்கு பிரதமரைச் சந்திக்க வாய்ப்பு கிடைக்காத நிலையில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, 20 நிமிடங்கள் பேசியுள்ளார்.
அப்போது, தமிழக சட்டம் -ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியுள்ளதாகத் தெரிகிறது. அப்போது, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது:
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், தமிழகத்துக்கு தேவையான நீர் கிடைக்கும். தற்போது இதுதொடர்பான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அறிந்தேன். அதை விரைவுபடுத்தி, திட்டத்தை முடிக்க வேண்டும் என அமித் ஷாவிடம் வலியுறுத்தினேன்.
‘நடந்தாய் வாழி காவிரி’ என்ற திட்டத்தின் கீழ், காவிரியில் கலக்கும் மாசுபட்ட நீரை சுத்திகரித்து அனுப்பும் திட்டத்தை பிரதமரிடம் தெரிவித்திருந்தோம். அந்த திட்டம் குடியரசுத் தலைவர் உரையிலும் இடம் பெற்றிருந்தது. அதையும் விரைவாக நிறைவேற்றக் கோரிக்கை விடுத்தேன்.
தமிழகத்தில் தற்போது சட்டம் - ஒழுங்கு சீரழிந்துவிட்டது. தமிழகம் முழுவதும் போதைப் பொருட்கள் தடையின்றிக் கிடைக்கின்றன. இதுகுறித்து உள்துறை அமைச்சரிடம் எடுத்துரைத்தோம்.
தமிழக சட்டப்பேரவையில் இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. ஆனால், உரிய நடவடிக்கை எடுக்காததால், மத்திய அமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்றோம்.
சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது மாநில அரசின் கடமை. போதைப் பொருள் எங்கிருந்து வந்தாலும், அதை தடுத்து நிறுத்தி, கடத்துவோர், விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு அலட்சியமாக இருக்கிறது. இதுகுறித்தும் மத்திய அமைச்சரிடம் தெரிவித்தோம்.
தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி தொடர்வது குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளோம். அனைத்து துறைகளிலும் கமிஷன் நடமாடுகிறது. பணிகள் நடக்கவில்லை. இதுகுறித்தும் தெரிவித்தோம்.
நாங்கள் அரசியல் பேசவில்லை. அதிமுக தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளதால், அதுகுறித்து தெரிவிக்க இயலாது. நான் தற்போது 20 மாவட்ட நிர்வாகிகள், மக்களை சந்தித்துள்ளேன். தமிழகத்தில் சொத்து வரி, மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. எங்கள் ஆட்சிக் காலத்தில் அவர்கள் போராட்டம் நடத்தினார்கள். ஆனால், கரோனாவில் இருந்து மீண்டு மக்கள் வாழப் போராடி வரும் நிலையில், திமுக அரசு கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு பழனிசாமி கூறினார். டெல்லியில் இருந்து அவர் நேற்று மாலை கோவை வந்து, அங்கிருந்து சேலம் சென்றார்.
பிரதமரை சந்திக்கும் ஓபிஎஸ்?
இதற்கிடையில், முன்னாள்முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கடந்த ஆண்டு காலமான தனது மனைவிக்கு திதி கொடுப்பதற்காக காசிக்கு சென்றுள்ளார். அவர் அங்கிருந்து டெல்லி சென்று பிரதமர், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT