Published : 21 Sep 2022 06:40 AM
Last Updated : 21 Sep 2022 06:40 AM

புதுவையில் தந்தை பெரியார் தி.க.வுடன் இந்து முன்னணி, பாஜகவினர் மோதல்

புதுச்சேரியில் மோதலில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினர் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை போலீஸார் தடுத்து நிறுத்தி கட்டுப்படுத்தினர்.

புதுச்சேரி: மனுதர்ம சாஸ்திரம் தொடர்பாக, புதுச்சேரியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரும் இந்து முன்னணி மற்றும் பாஜகவினரும் மோதலில் ஈடுபட்டனர். இருதரப்பும் கற்கள் மற்றும் செருப்புகளை வீசி தாக்கிக் கொண்டதில் 2 பேர் காயமடைந்தனர்.

மனு தர்ம சாஸ்திரத்தில் இந்துக்கள் பற்றி தவறாக குறிப்பிட்டுள்ளதாக திமுக எம்.பி ஆ.ராசா அண்மையில் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பாஜக மற்றும் இந்து முன்னணி தரப்பில் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே சிறிய அளவில் போராட்டங்களும் நடந்து வருகின்றன.

இந்நிலையில் புதுச்சேரியில் நேற்று, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் காமராஜர் சிலையின் அருகே மனுதர்ம சாஸ்திரத்தை கொளுத்தும் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று காலை தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் வீர மோகன், துணைத் தலைவர் இளங்கோவன் உள்பட அந்த அமைப்பைச் சேர்ந்த பலர் காமராஜர் சிலை அருகே கூடினர்.

போலீஸார் அங்கு வந்து, ‘மனுதர்ம சாஸ்திரத்தை எரிக்கக் கூடாது - மீறினால் கைது செய்வோம்’ என்றனர். இதையடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக பெரியார் திராவிடர் கழகத்தினர் தெரிவித்தனர். ஆனாலும், சிறிது நேரத்தில் மனுதர்ம நகலை கிழித்து, தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். அதை போலீஸார் தடுக்க முயன்றனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதன்பிறகு போலீஸார் அவர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றினர்.

அப்போது போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு வந்த இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினர் கோஷம் எழுப்பினர். திடீரென்று காவல்துறை வாகனத்தில் ஏறிக் கொண்டிருந்தோர் மீது கற்கள் மற்றும் செருப்புகள் வீசப்பட்டன.

இதையடுத்து இரு தரப்பினரும் முக்கியச் சாலையில் நின்றபடி கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். இதில், இந்து முன்னணி நிர்வாகி முருகையன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டார். சப்-இன்ஸ்பெக்டர் குமாருக்கும் காயம் ஏற்பட்டது. மேலும் சில போலீஸார், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆகியோருக்கு சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டன. கல்வீச்சில் காவல்துறை வாகன கண்ணாடி சேதமடைந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டோரை போலீஸார் வாகனத்தில் அழைத்துசென்றவுடன் இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினர் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் நேரு வீதியில் ஊர்வலமாக சென்று காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் மருத்துமனைக்குச் சென்று, முருகையனிடம் நலம் விசாரித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x