Published : 21 Sep 2022 06:47 AM
Last Updated : 21 Sep 2022 06:47 AM

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு அதிகபட்ச விலை கிடைப்பதே அரசின் நோக்கம் - நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கருத்து

குன்னூர் உபாசி அரங்கில் நேற்று நடைபெற்ற தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்க மாநாட்டில் பேசிய தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

குன்னூர்: விவசாயிகளின் விளைபொருட்களுக்கு அதிகபட்ச விலையும், நுகர்வோருக்கு குறைந்த விலையில் பொருட்களும் கிடைப்பதே தமிழக அரசின் நோக்கம் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்கத்தின் 129-வது மாநாடு, நீலகிரி மாவட்டம் குன்னூர் உபாசி அரங்கில் நேற்று நடைபெற்றது. உபாசி தலைவர் எம்.பி.செரியன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:

பெரும் விவசாயிகள் மற்றும் சிறு, குறு விவசாயிகள் இடையே பெரிய இடைவெளி உள்ளது. சிறு விவசாயிகளுக்கு தகவல்கள் கிடைப்பதிலும், தகவல் பரிமாற்றத்திலும் தாமதம் ஏற்படுகிறது. விவசாயிகளுக்கு அதிக வருவாய், நுகர்வோருக்கு குறைந்தபட்ச விலையில் பொருட்கள் கிடைப்பதே மாநில அரசின் நோக்கம்.

ஆனால், நிதர்சனத்தில் இடைத்தரகர்கள்தான் அதிக லாபம் பெறுகின்றனர். இதை போக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளால் உற்பத்தி அதிகரிக்க வழிவகை செய்கிறது. அரசின் திட்டங்கள் தற்போது துறை ரீதியாக உள்ளது. இதை பயனாளிகள் ரீதியாக செயல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சுகாதாரம், கல்வியை மேம்படுத்தவும், தாய் - சேய் உயிரிழப்பு விகிதாசாரத்தை குறைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நடவடிக்கையில், தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. இருப்பினும் தகுதிக்கேற்ப நாம் இன்னும் இலக்கை அடையவில்லை. நமது பட்ஜெட் ரூ.4 லட்சம் கோடியாக உள்ளது.

விலை குறைவு, சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள போட்டி ஆகியவற்றால் தோட்டத் துறை பாதிப்புக்குள்ளாகி வருகிறது. இதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த மாநாட்டில் இஸ்ரேல் பொருளாதார விவகாரத் துறை ஆலோசகர் ஜோசப் அவ்ரஹாம், உபாசி செயலாளர் சஞ்சித், உறுப்பினர்கள் மற்றும் தோட்ட அதிபர்கள் பங்கேற்றனர். துணைத் தலைவர் ஜெப்ரி ரிபெல்லோ நன்றி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x