Published : 21 Sep 2022 06:56 AM
Last Updated : 21 Sep 2022 06:56 AM

19 மீனவர்கள், 96 படகுகளை மீட்க நடவடிக்கை - மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை/புதுக்கோட்டை/ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 19 மீனவர்கள், 96 படகுகளை விரைவில் மீட்கும்படி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து நேற்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இலங்கை கடற்படையினரால் செப்.20-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 8 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களது விசைப்படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதை தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். இதுதவிர, ஏற்கெனவே 95 மீன்பிடி படகுகள் மற்றும் 11 மீனவர்கள் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளனர். சமீபத்தில் 12 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதில் வெளியுறவுத்துறை அமைச்சகம் எடுத்த ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே நேரம் கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்கள் படகுகளையும் விரைவில் விடுவிக்க தூதரகம் வாயிலாக உரிய முயற்சிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

8 பேர் கைது

முன்னதாக, புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர். ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து 87 விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு சென்றனர். பி.தமிழ்செல்வன்(37) என்பவருக்குச் சொந்தமான படகில் அவருடன், சி.விஜி(28), ஏ.தினேஷ்(26), கே.ரஞ்சித்(27), எஸ்.பக்கிரிசாமி(45), எஸ்.கமல்(25), எஸ்.புனுது(41), எம்.கார்த்திக்(27) ஆகிய 8 பேர் கோட்டைப்பட்டினத்தில் இருந்து சுமார் 32 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துள்ளனர்.

அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி 8 மீனவர்களை கைது செய்ததுடன், அவர்களது மீன்பிடி உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, காங்கேசன் துறை கடற்படை தளத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

அன்புமணி கோரிக்கை

ஜெகதாப்பட்டினம் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். அவர் நேற்று தனது ட்விட்டர் பதிவுகளில், ஏற்கெனவே கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதற்கு அடுத்த 2 நாட்களில் மீண்டும் மீனவர்கள் கைது செய்யப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x