Published : 24 Nov 2016 06:19 PM
Last Updated : 24 Nov 2016 06:19 PM
ஆலங்குளம் சிமெண்ட் ஆலையை மூடும் திட்டமோ, தனியாருக்கு விற்கும் திட்டமோ அரசிடம் இல்லை என உயர் நீதிமன்ற கிளையில் தமிழ்நாடு சிமெண்ட் கழக மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
திமுக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ''விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தில் 1970ல் அரசு சிமெண்ட் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. சிமெண்ட் ஆலை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நல்ல லாபகரமாக இயங்கி வருகிறது. உள்ளூர் மக்கள் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில், ஆலங்குளம் சிமெண்ட் ஆலையை மூடுவதற்கும், தொழிற்சாலையை, சொத்துகளை தனியாருக்கு விற்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
எனவே, சிமெண்ட் ஆலையை தொடர்ந்து இயங்கச் செய்யவும், ஆலையில் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தவும் உத்தரவிட வேண்டும். மேலும், சிமெண்ட் ஆலையை மூடவும், சொத்துகளை தனியாருக்கு விற்கவும் தடை விதிக்க வேண்டும்'' எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் அமர்வில் முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் யூஜின் வாதிட்டார்.
தமிழ்நாடு சிமெண்ட் கழகம் மேலாண்மை இயக்குனர் சி.காமராஜ் பதில் மனு தாக்கல் செய்தார்.
அதில் கூறியிருப்பதாவது:
ஆலங்குளத்தில் அரசு சிமெண்ட் ஆலை 1968ல் அமைக்கப்பட்டது. அங்கு 1970ல் உற்பத்தி தொடங்கியது. தினமும் 1200 மெட்ரிக் டன் சிமெண்ட் உற்பத்தி நடைபெறுகிறது. இந்த ஆலையால் நேரடியாகவும், மறைமுகமாகவும் 1,700 பேர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். ஆலங்குளம் சிமெண்ட் ஆலை லாபகரமாக இயங்கிவருகிறது. ஆலங்குளம் தமிழ்நாடு சிமெண்ட் ஆலையை மூடவோ, தனியாருக்கு விற்பனை செய்யவோ, மாற்றம் செய்யவோ அரசிடம் எந்த திட்டமும் இ்ல்லை.
சிமெண்ட் ஆலை முன்பு நடைபெற்ற போராட்டங்கள் அனைத்தும் அரசியல் காரணங்களுக்காக நடத்தப்பட்டவை. ஆலங்குளம் சிமெண்ட் ஆலை மேலாண்மை இயக்குனர், ஆலையை மேம்படுத்துவது தொடர்பாக அரசுக்கு பரிந்துரைகளை அனுப்பியுள்ளார். அந்த பரிந்துரைகள் நிதி ஒதுக்கீட்டிற்காக காத்திருக்கின்றன.
மனுதாரர் யூகம் மற்றும் அரசியல் உள்நோக்கத்துடன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அரசியல் ஆதாயம் பெறும் நோக்கத்திலும் அரசின் மதிப்பிற்கு குந்தகம் ஏற்படுத்தும் நோக்கத்திலும் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சிமெண்ட் ஆலையை மூடும் திட்டம் இல்லை என அரசு தெரிவித்திருப்பதால், அது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டியதில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT