Published : 20 Sep 2022 11:52 PM
Last Updated : 20 Sep 2022 11:52 PM
மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் பெண் தலைமை காவலர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார்.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வியாபாரி ஜெயராஜ், அவர் மகன் பெனிக்ஸ் ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கு, மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகலட்சுமி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. தலைமை காவலர் பியூலா செல்வகுமாரி நீதிமன்றத்தில் ஆஜராகி சட்சி ஆளித்தார்.
அப்போது, "ஜெயராஜ், பெனிக்ஸ் இருவரையும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருந்த 10 காவலர்களும் மீண்டும் மீண்டும் தாக்கி உடல் முழுவதும் கொடுங்காயங்கள் ஏற்படுத்தினர். அதனால் தான் அவர்கள் இறந்து போனார்கள்" என்றார். மேலும், "காவலர்கள் ஜெயராஜை கொடூரமாக தாக்கியபோது அவர் தனக்கு சுகர் மற்றும் பிரசர் இருக்கிறது என்றுகூறி இதற்கு மேலும் தன்னை அடிக்க வேண்டாம் எனக் கேட்டார். பெனிக்ஸ் காவலர்களிடம் மன்னிப்புக் கோரினார். இதனால் காவலர்கள் அவர்களை அடிப்பதை நிறுத்தினர்.
அப்போதுவந்த காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்ற காவலர்களை வசைபாடி, `ஏன் அவர்களை அடிக்காமல் விட்டு வைத்திருக்கிறீர்கள்' என்று சொல்லி மீண்டும் மீண்டும் அடிக்கத் தூண்டினார். இதுபோன்று 3-4 முறை காவலர்கள் அடிப்பதை நிறுத்தியபோதும், ஆய்வாளர் ஸ்ரீதர் மீண்டும் மீண்டும் தூண்டிவிட்டு அவர்கள் உயிர்போகின்ற அளவிற்கு அடிக்க வைத்தார்" என்று சாட்சியம் கொடுத்தார். அவரின் சாட்சியத்தை அடுத்து இந்த வழக்கு விசாரணை செப். 23 க்கு ஒத்திவைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT