Published : 20 Sep 2022 07:53 PM
Last Updated : 20 Sep 2022 07:53 PM
சின்னமனூர்: நீர் திறப்புக்கு முன்பாக தந்தைப் பெரியார் கால்வாயை சீரமைக்கவேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு மூலம் பாசனவசதி பெறாத பகுதிகளுக்கு கால்வாய் மூலம் நீர் கொண்டு செல்லப்பட்டு ஒரு போக விவசாயம் நடைபெற்று வருகிறது. பிடிஆர் மற்றும் தந்தைப் பெரியார் கால்வாய்கள் மூலம் உத்தமபாளையம் வட்டத்திற்கு உட்பட்ட சின்னமனூர், வேப்பம்பட்டி, சீப்பாலக்கோட்டை ஆகிய கிராமங்களைச் சுற்றியுள்ள 830 ஏக்கர் நிலங்கள், தேனி வட்டத்திற்கு உட்பட்ட சீலையம்பட்டி, பூமலைக்குண்டு, தர்மாபுரி, தாடிச்சேரி, வெங்கடாசலபுரம், கொடுவிலார்பட்டி, ஜங்கால்பட்டி, கோவிந்தாபுரம், பாலகிருஷ்ணாபுரம் கிராமங்களைச் சுற்றியுள்ள 4 ஆயிரத்து 316 ஏக்கர் நிலங்கள் என மொத்தம் 15 கிராமங்களைச் சுற்றியுள்ள 5 ஆயிரத்து 146 ஏக்கர் நிலங்கள் இதன்மூலம் பாசன வசதி பெற்று வருகின்றன.
இந்நிலையில், இந்த நிலங்கள் பாசன வசதி பெறுவதற்காக கடந்த 14-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆற்றில் இருந்து வரும் நீர், சீலையம்பட்டி சமத்துவபுரம் அருகே இரண்டு பகுதிகளாக பிரிந்து பிடிஆர் மற்றும் தந்தைப் பெரியார் கால்வாய்கள் வழியே கடந்து செல்கின்றன. ஒவ்வொரு கால்வாயிலும் 15 நாட்களுக்கு முறை வைத்து மொத்தம் 120 நாட்களுக்கு நீர் பிரித்து அனுப்பப்படுவது வழக்கம். தற்போது இடதுபுறம் உள்ள தந்தைப் பெரியார் கால்வாய் மதகுகள் மூடப்பட்டு பிடிஆர் கால்வாய் வழியே தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.
அடுத்த வாரம் இந்த மதகுகள் மூடப்பட்டு தந்தைப் பெரியார் கால்வாய்க்கு தண்ணீர் பிரித்து அனுப்பப்படும். இந்நிலையில் இந்த கால்வாய் நெடுகிலும் குப்பைகள் அதிகளவில் குவிந்து கிடக்கின்றன. கரையோர மரங்கள் பல சாய்ந்து கால்வாய்க்குள் கிடக்கின்றன. குறிப்பாக மதகுப் பகுதிகளிலே ஏராளமான கழிவுகள் தேங்கி நீர் செல்லும் பாதை அடைபட்டுள்ளது. ஆகவே நீர்திறப்புக்கு முன்பு இவற்றை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தமிழக தேசிய விவசாயிகள் சங்க தேனி மாவட்டத் தலைவர் எம்.சீனிராஜ் கூறுகையில், "ஆண்டின் சில மாதங்கள் மட்டும் நீர் செல்வதால் குப்பைகளும், கழிவுகளும் தேங்கி விடுகின்றன. இருபுற சிமென்ட் தளமும் பல இடங்களில் பெயர்ந்து பாசன நீர் விரயமாகும் நிலை உள்ளது. இவற்றை சரி செய்து விட்டு இந்த வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும்.
கடந்த 2 ஆண்டுகளாக பருவகாலங்களில் பெரியாறு அணையில் போதுமான நீர் இருப்பதால் இக்கால்வாயில் இருபோக பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும்" என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT