Published : 20 Sep 2022 03:16 PM
Last Updated : 20 Sep 2022 03:16 PM

தமிழகத்தில் புதன்கிழமை 1,000 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம்: மா.சுப்பிரமணியன் தகவல்

கோப்புப்படம்

சென்னை: தமிழகத்தில் நாளை (புதன்கிழமை) 1000 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தேசிய நலவாழ்வு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழகம் முழுவதும் ஜனவரி முதல் 1,166 நபர்கள் இன்ஃப்ளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 371 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5 வயதுக்குட்பட 46 குழந்தைகளுக்கும், 5 -14 வயதுக்குட்பட்ட 60 குழந்தைகளுக்கும், 14 - 60 வயதுடையவர்கள் 194 பேருக்கும், 65 வயதுக்கு மேற்பட்ட 71 பேருக்கும் காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 15 நபர்கள் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் உள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் 260 பேரும், 96 பேர் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 10 மாதங்களில் 10 நபர்கள் இந்த நோயால் இறந்துள்ளனர்.

காய்ச்சல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், புறநகர் மருத்துவமனைகள் என மொத்தம் உள்ள 11,333 மருத்துவமனைகளில் மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கூடுதலாக நாளை தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெறும். சென்னையில் மட்டும் 100 முகாம் நடைபெறும்.

இந்த முகாம்களில் சளி, இருமல், காய்ச்சல் ஏதேனும் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்துகொள்ளலாம். இந்தக் காய்ச்சல் முகாம்களில் 476 நடமாடும் மருத்துவக் குழுவினர் ஈடுபடுவார்கள். 3 நபர்களுக்கு மேற்பட்ட நபர்கள் காய்ச்சல் இருக்கும் பகுதியில் இந்த முகாம் தொடர்ந்து நடைபெறும்" என்று அமைச்சர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x