Published : 20 Sep 2022 01:38 PM
Last Updated : 20 Sep 2022 01:38 PM

அருப்புக்கோட்டை சம்பவம் | காவல் துறை விசாரணையின்போது எளிய மக்கள் கொல்லப்படுவது அதிகரிப்பு: சீமான்

சீமான் | கோப்புப்படம்

சென்னை: " திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த ஒன்றரை வருட காலத்தில், காவல் துறை விசாரணையின்போது குரலற்ற எளிய மக்கள் கொல்லப்படும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது வன்மையான கண்டனத்திற்குரியது" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "அருப்புக்கோட்டை அருகே செம்பட்டியைச் சேர்ந்த தங்கப் பாண்டி காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியும், மனவேதனையும் அளிக்கிறது. கணவர் தங்கபாண்டியை இழந்து இரு குழந்தைகளோடு தவித்துவரும் தங்கை கோகிலாதேவிக்கும், பெற்றோருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

கடந்த 13-ம் தேதி அருப்புக்கோட்டை நகர காவல் துறையால் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கூலித் தொழிலாளியான தங்கப்பாண்டி விசாரணைக்குப் பிறகு மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தங்கப்பாண்டியின் உடலில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் கடுமையான காயங்கள் இருந்ததை உடற்கூறாய்வு உறுதிப்படுத்தியிருப்பது காவல் துறையினரால் தாக்கப்பட்டு அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை மேலும் அதிகரிக்கிறது. இவ்வழக்கு குற்றப் புலனாய்வுத் துறை (சிபிசிஐடி) விசாரணைக்கு மாற்றப்பட்டு 6 நாட்களாகியும், இதுவரை விசாரணையைத் தொடங்காதது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது?

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த ஒன்றரை வருட காலத்தில், காவல் துறை விசாரணையின்போது குரலற்ற எளிய மக்கள் கொல்லப்படும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. சமத்துவம், சமூக நீதி, திராவிட மாடல் என்றெல்லாம் கூறிவிட்டு, அடிப்படை மனித உரிமையைக்கூடக் காத்திட முடியாத அரசாக திமுக அரசு விளங்குவது வெட்கக்கேடானது. காவல் நிலைய மரணங்களைத் தடுக்கப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுபோல் திமுக அரசு வெளியிட்ட அறிவிப்புகள் யாவும், வழக்கம்போல் வெற்று விளம்பர அரசியல் மட்டுமே என்பதை தங்கப்பாண்டியின் மரணம் உறுதிப்படுத்துகிறது.

ஆகவே, தங்கபாண்டியின் மர்ம மரணம் குறித்த குற்றப் புலனாய்வுத்துறை விசாரணையை விரைவுபடுத்தி, எவ்வித அதிகார குறுக்கீடுமற்ற நியாயமான நீதி விசாரணை நடைபெறுவதை உறுதிசெய்து, அவரது உயிரிழப்புக்குக் காரணமான அனைவருக்கும் சட்டப்படி கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். அதோடு, தங்கபாண்டி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், 50 லட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதியும் வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x