Last Updated : 20 Sep, 2022 01:20 PM

1  

Published : 20 Sep 2022 01:20 PM
Last Updated : 20 Sep 2022 01:20 PM

மாணவர் சேர்க்கை, சான்றிதழ் முறைகேடு: காமராசர் பல்கலை முன்னாள் தேர்வாணையர் உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு

காமராசர் பல்கலைக்கழகம் | கோப்புப் படம்.

மதுரை: காமராசர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கை, சான்றிதழ் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் காரணமாக முன்னாள் கூடுதல் தேர்வாணையர் உட்பட 8 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்

மதுரை காமராசர் பல்கலைக்கழக தொலை நிலைக்கல்வி இயக்ககத்தில் மதிப்பெண் பட்டியல் வழங்குதல், மாணவர் சேர்க்கை, விடைத்தாள்கள் மாயம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடு புகார்கள் உள்ளன.

இந்த நிலையில், கடந்த 2014-15-ம் கல்வியாண்டில் இப்பல்கலைக்கழகத்தின் கேரளாவில் செயல்பட்ட 4 மையங்களில் மூலம் கட்டணம் செலுத்தாமல் மாணவர்கள் சேர்க்கை நடந்தது, தேர்ச்சி பெறாதவர்களை தேர்ச்சி பெற்றதாகவும், தேர்வில் பங்கேற்காத மாணவர்களை தேர்ச்சி பெற்றதாகவும் சான்றிதழ் வழங்கி முறைகேடு நடந்திருப்பதாக புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், இந்த முறைகேட்டில் கூடுதல் தேர்வாணையர் ராஜராஜன் உட்பட பல்கலைக்கழக அலுவலர்கள் கேரளா மைய ஒருங்கிணைப்பாளர்கள் அனுப்பிய கட்டண விவரத்தை ஆய்வு செய்யாமல் மாணவர் சேர்க்கை வழங்கியது,

மேலும், மதிப்பெண் பட்டியல் வழங்கியதிலும் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக மதுரை காமராசர் பல்கலைக் கழக தொலை நிலைக்கல்வி முன்னாள் கூடுதல் தேர்வாணையர் எம். ராஜராஜன்( கடந்த ஆண்டு இறந்துவிட்டார்), மாணவர் சேர்க்கை பிரிவு முன்னாள் கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி, தேர்வு பிரிவு கணினி அலுவலர் கார்த்திகை செல்வன், இளநிலை வகுப்புகளுக்கான தேர்வு பிரிவு முன்னாள் கண்காணிப்பாளர் ராஜபாண்டி மற்றும் இப்பல்கலைக்கழக கேரள மையங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜிஜி, அப்துல் அஜிஸ், சுரேஷ், ஜெயபிரகாசன் ஆகியோர் மீது மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் குமரகுரு வழக்குப் பதிவு செய்தார். தொடர்ந்து ஆய்வாளர் ரமேஷ் பிரபு விசாரணை நடத்தி வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x