Published : 20 Sep 2022 06:14 AM
Last Updated : 20 Sep 2022 06:14 AM
சென்னை: அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி 3 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளை அவர் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சை நீடித்து வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் - பழனிசாமி இடையே இதுவரை தீர்வு எட்டப்படவில்லை. ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக சிறப்பு பொதுக்குழுவில், தான் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதும், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றியதும் செல்லும் என்பதில் இபிஎஸ் உறுதியாக உள்ளார். பொதுக்குழு தீர்மான விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பியுள்ளார். ஆனால், தேர்தல் ஆணையம் அதன் மீது இதுவரை முடிவெடுக்கவில்லை.
எம்ஜிஆர் வகுத்த கட்சி விதிகளின்படி, தொண்டர்களால் தேர்ந்தெடுப்பவரே கட்சியின் தலைமை பதவிக்கு வரமுடியும். ஏற்கெனவே, ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் சேர்ந்து ஒரே வேட்புமனு தாக்கல் செய்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த பதவி 5 ஆண்டுகள் வரை இருக்கும். அதனால் ஜூலை 11-ம் தேதி நடந்த சிறப்பு பொதுக்குழு செல்லாது என்பதில் ஓபிஎஸ் உறுதியாக உள்ளார். அந்த பொதுக்குழு செல்லும் என உயர் நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்த பிறகு, உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ள ஓபிஎஸ், தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார். இப்பிரச்சினையில் பிரதமர் தலையிட்டு தீர்வு காணப்படும் என்று இருவரும் நம்பியிருந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் சென்னை வந்தபோது, அவரை சந்திக்க அழைப்பு ஏதும் வராததால், வரவேற்பு, வழியனுப்பு நிகழ்ச்சிகளில் மட்டும் இருவரும் பங்கேற்றனர்.
இந்நிலையில், 3 நாள் பயணமாக இபிஎஸ் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உடன் சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை நேரில் சந்தித்து அதிமுக விவகாரம் தொடர்பாக இபிஎஸ் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஜூலை 11 பொதுக்குழுக் கூட்ட தீர்மானங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தில் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதை ஏற்றுக் கொள்ளுமாறு ஆணையத்திடம் வலியுறுத்தி கூறவும் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இப்பணிகளை முடித்துக்கொண்டு 22-ம் தேதி இரவு சென்னை திரும்ப இபிஎஸ் திட்டமிட்டுள்ளார்.
ஓபிஎஸ் காசி பயணம்: ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமியின் முதலாமாண்டு நினைவையொட்டி, மனைவிக்கு திதி கொடுப்பதற்காக ஓபிஎஸ் நேற்று முன்தினம் ராமேசுவரம் சென்றிருந்தார். அதைத் தொடர்ந்து அவர் நேற்று மாலை காசிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT