Published : 26 Nov 2016 09:47 AM
Last Updated : 26 Nov 2016 09:47 AM

41 தமிழ் இலக்கியங்களை செம்பதிப்பாக வெளியிடும் பணியில் செம்மொழி மத்திய நிறுவனம்: 20 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்படுகிறது

தமிழ் மொழியில் உள்ள 41 இலக்கியங்களைச் செம்பதிப்பாக வெளியிடும் பணியில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அதில் இதுவரை 3 நூல்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளன. இதேபோல் 20 மொழிகளில் திருக் குறளை மொழிபெயர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

நாகர்கோவில், முகிலன் குடி யிருப்பைச் சேர்ந்தவர் முகிலை ராசபாண்டியன். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளராக உள்ளார். இவரது முயற்சியால் அண்மையில் குமரி மாவட்டம் காப்பிக்காடு பகுதி யில், தொல்காப்பியருக்கு சிலை வைக்கப்பட்டது. 18-ம் நூற்றாண் டின் தோள்சீலைப் போராட்டத்தை மையப்படுத்திய ‘அலைகளின் காலம்’, தென் திருவிதாங்கூர் தமிழர் போராட்டத்தை முன்வைத்து எழுதப்பட்ட ‘அருகருகே நான்கு வீடுகள்’, குமரி மாவட்டத்தில் நடந்த மண்டைக்காடு கலவரத்தை மையப்படுத்தி ‘தேரி மணல்’, குமரி மாவட்டத்தின் மதரீதியான போக்கை மையப்படுத்தி ‘போகிற வழி’, ஒரே ஜாதிக்குள் நிலவும் பொருளாதார ரீதியான பாகுபாடு களை மையப்படுத்தி ‘ஆலங்கால்’ என 5 நாவல்கள், சிறுகதைகள், ஆய்வுக் கட்டுரைகள், சிறார் இலக்கியம் என பல்வேறு துறை களில் 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

பல்வேறு விருதுகள் பெற்றுள்ள இவர், நாகர்கோவிலுக்கு வரும் போதெல்லாம் இளையோருக்கு தமிழ்த் தளத்தில் சாதிப்பதற்காக வழி காட்டி வருகிறார். குறிப்பாக செம்மொழி நிறுவனம் தமிழ் பணிக்கு வழங்கும் பல்வேறு உதவித்தொகை, திட்டங்கள் குறித்து இளம் தலைமுறைக்கு எடுத்துக்கூறி, அவர்களைத் தமிழ்ப் பணிக்கு உந்தித் தள்ளி வருகிறார்.

முகிலை ராசபாண்டியன் இதுபற்றிக் கூறியதாவது:

தமிழ் மொழி 2004-ம் ஆண்டு செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து செம்மொழி வளர்ச்சிக்காக மத்திய அரசால் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தொடங்கப்பட்டது.

மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான இது, தமிழில் உள்ள செம்மொழி இலக்கியங்களை உலகம் முழுவதும் பரப்பும் பணியை செய்து வருகிறது. பத்துப் பாட்டு, எட்டுத் தொகை மற்றும் பதினெண்கீழ்கணக்கில் வரும் 36 நூல்கள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, இறையனார் களவியல், முத்தொள் ளாயிரம் என 41 இலக்கியங்களைச் செம்பதிப்பாக வெளியிடும் பணி களை இந்நிறுவனம் செய்து வருகிறது.

அதாவது தொடக்கக் காலங் களில் எழுதப்பட்ட இந்த நூல்களின் ஏட்டுச் சுவடியில் இருந்துதான், வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு படைப்பாளிகளால் ஏடு பிரதி எடுக்கப்பட்டு, இருபதாம் நூற்றாண்டில் அச்சேற்றப்பட்டு இன்று புழங்கி வருகிறது. அவை அதன் மூலப் படைப்பில் இருந்து மாறுபாடுகளுக்கு உட்பட்டிருக்கும் வாய்ப்பு இருக்கிறது.

எனவே, அதன் தொடக்க நிலை யில் இருந்து ஆய்வு செய்து, இப்போது பின்பற்றப்படும் திருந்திய பதிப்பு வரை அத்தனையையும் ஆவணப்படுத்தி, அதில் எது சரியென விளக்குவதே செம் பதிப்பு. அதில், இதுவரை 3 இலக்கியங்கள் செம்பதிப்பாக வெளிவந்துள்ளன. இந்த 41 இலக்கியங்களும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட உள்ளன. அதில் இதுவரை நற்றிணை, குறுந்தொகை உள்ளிட்ட 10 நூல்கள் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன.

திருக்குறளை இந்திய மக்கள் அனைவரும் அவரவர் மொழி ஒலிநடை உச்சரிப்பு, செய்யுள் நடை, உரைநடை, ஆங்கில மொழிபெயர்ப்புடன் ஒரே நூலாக தெரிந்துகொள்ளும் வண்ணம் 20 மொழிகளில் மொழிபெயர்த்து வருகிறோம். அதில் கன்னடம், தெலுங்கு, குஜராத்தி, மணிப்புரி மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டுவிட்டோம். தொடர்ந்து 16 மொழிகளில் மொழிபெயர்ப்பு பணி நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x