Published : 19 Sep 2022 06:24 PM
Last Updated : 19 Sep 2022 06:24 PM
புதுச்சேரி: பிரதமர் மோடியின் சிறுவயது முதல் வாழ்க்கை வரலாற்றை அறிய புதுச்சேரியில் கண்காட்சி பேருந்து வலம் வரத் தொடங்கியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெறும் தொடர் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி சிறு வயது முதல் வாழ்க்கை வரலாற்றினை அனைவரும் பார்க்கக்கூடிய வகையில் கண்காட்சி பேருந்து மாநிலம் முழுவதும் செல்ல புதுச்சேரி பாஜக ஏற்பாடு செய்துள்ளது.
புதுச்சேரி காமராஜர் சாலைஅருகில் இருந்து மாநிலம் முழுவதும் அனைத்து இடங்களுக்கும் செல்லக்கூடிய கண்காட்சி பேருந்து துவக்க நிகழ்ச்சி பாஜக மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் இன்று நடைபெற்றது.
மோடி பற்றி அனைவரும் தெரிந்து கொள்ளக்கூடிய கண்காட்சி பேருந்தை சட்டப்பேரவை உறுப்பினர் ராமலிங்கம் பாஜக மாநில இளைஞர் அணி துணைத் தலைவர் உமா சங்கர், தேசிய விவசாய அணி செயற்குழு உறுப்பினர் பாரதிமோகன், மாநில கலாச்சார பிரிவு அமைப்பாளர் ஜோதி செந்தில் கண்ணன், காரைக்கால் முன்னாள் மாவட்ட தலைவர் மீனாட்சி சுந்தரம் மற்றும் சிறப்பு அழைப்பாளர் காமராஜ் லட்சுமி நாராயணன் ஆகியோர் ஏற்பாடு செய்து இருந்தனர்.
பேருந்தில் பிரதமர் மோடியின் சிறு வயது புகைப்பங்கள் தொடங்கி கட்சிப் பணிகள், சர்வதேச அளவிலான வரவேற்பு என அபூர்வ புகைப்படங்கள் பல இடம்பெற்றுள்ளன. அத்துடன், அவரது வரலாற்றை முழுமையாக அனைவரும் அறியும் வகையில் ஏற்பாடு செய்துள்ளதாக குறிப்பிட்டனர். பல புகைப்படங்களை திரட்டி இக்கண்காட்சி பேருந்தை மக்கள் மோடியை பற்றி அறியும் வகையில் வடிவமைத்ததாக தெரிவித்தனர்.
இந்தக் கண்காட்சி பேருந்து துவக்க நிகழ்ச்சியில் பேரவைத்தலைவர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் ஜெ சரவணன் குமார், மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இப்பணிகள் தொடர்பாக பாஜக நிர்வாகிகள் கூறுகையில், "பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி கண்காட்சி வைக்க திட்டமிட்டோம். மக்களிடம் மோடியை கொண்டு செல்ல கண்காட்சி பேருந்தை வடிவமைத்தோம். பேருந்தை சுற்றி மோடியின் சாதனைகளும், பேருந்தினுள் மோடியின் வாழ்க்கை வரலாற்றை அறிய அபூர்வ புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. மோடி பிறந்தபோது சிறு வயது புகைப்படம் தொடங்கி அவர் பணியாற்றிய போது எடுத்தபடம், அரசியல் பணியில் தொடங்கி தற்போது வரை உள்ள அபூர்வ படங்கள் உள்ளன. மக்கள் கூடும் இடங்களில் இப்பேருந்தை நிறுத்தி பார்க்க ஏற்பாடு செய்வோம். வரும் அக்டோபர் 2 வரை இப்பேருந்து மாநிலம் முழுக்க வலம் வரும்" என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT