Published : 19 Sep 2022 12:26 PM
Last Updated : 19 Sep 2022 12:26 PM
சென்னை: பள்ளிக்குழந்தைகள் உடல்நலனில் விளையாட வேண்டாம்: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவியுங்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ''தமிழகத்தில் சளிக்காய்ச்சல் உள்ளிட்ட பலவகையான காய்ச்சல்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நோய்பரவலைத் தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. 3 நாட்களில் காய்ச்சல் சரியாகிவிடும் என்று ஆறுதல் கூறுவது மட்டுமே போதுமானதல்ல,
காய்ச்சலைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் நோய்ப்பரவல் சங்கிலியை உடைக்க வேண்டியது அவசியம். பள்ளிகளில் குழந்தைகள் நெருக்கமாக அமர்ந்திருப்பதாலும், ஒன்று கூடி விளையாடுவதாலும் காய்ச்சல் பரவுகிறது என்பதை மருத்துவ வல்லுனர்கள் உறுதி செய்திருக்கின்றனர்.
புதுச்சேரியில் 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதால் அங்கு குழந்தைகளிடையே காய்ச்சல் பரவுவது குறைந்திருக்கிறது. தமிழ்நாட்டிலும் நோய்ப்பரவல் சங்கிலியை உடைக்க வேண்டுமானால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டியது அவசியமாகும்.
மாணவர்களுக்கு கல்வி அவசியம்; அவர்களின் உடல்நலனைக் காக்க வேண்டியது மேலும் அவசியம். இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டக்கூடாது. எனவே, 9-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்; மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன்.'' இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT