Published : 19 Sep 2022 07:11 AM
Last Updated : 19 Sep 2022 07:11 AM
சென்னை: ரயில்வேயில் பணிபுரியும் குறிப்பிட்ட சில ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குகளில் இருந்து பணம் எடுத்து மோசடி செய்தது தொடர்பாக அனைத்து ரயில்வே மண்டலங்களிலும் சிறப்பு சோதனைகள் நடத்த ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இந்திய ரயில்வேயில் 17 மண்டலங்கள் உள்ளன. இந்த மண்டலங்களில் 12 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்திய ரயில்வேயின், ஒரு ரயில்வே மண்டலத்தில் போலி ஆவணங்களை உருவாக்கி, சில ரயில்வே ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து பணத்தை எடுத்துள்ளதாக ரயில்வே வாரியத்துக்கு புகார் வந்தது. புகாரின் பேரில் ரயில்வே வாரியம் நடத்திய, முதல்கட்ட விசாரணையில், ஊழியர்கள் தங்களின் ஒருமுறை கடவுச்சொல் பகிர்ந்தது, நிர்வாக அதிகாரிகளிடம் கையெழுத்து வாங்குவதை பின்பற்றாதது உள்ளிட்ட பிஎஃப் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாததுதான் காரணம் என்று தெரியவந்தது.
இந்த மோசடிக்கு பிறகு,அனைத்து ரயில்வே மண்டலங்களில் பணிபுரியும் ரயில்வே ஊழியர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கை சோதிக்க ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், கணக்கு அதிகாரியின் டிஜிட்டல் கையொப்பத்துடன் ஒருங்கிணைந்த ஊதியம் மற்றும் கணக்கியல் முறை (IPAS) விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே எச்சரிக்கை: இதுபோல மோசடிகளை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ரயில்வே வாரியம் கடந்த ஆண்டு அக்டோபரில் உத்தரவிட்டிருந்தது. சம்பந்தப்பட்ட துறை தங்கள் ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஊதியம் மற்றும் கணக்கியல் முறையை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்றும்,பகிர்ந்து கொண்டால், இதுபோன்ற மோசடிகள் நடக்கும் என்றும் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த புகார் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT