Published : 19 Sep 2022 06:17 AM
Last Updated : 19 Sep 2022 06:17 AM

மத்திய அரசு அனைத்து மொழிகளையும் தேசிய மொழிகளாக அங்கீகரிக்கிறது: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்து

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் கிருஷ்ணசாமி அல்லாடிக்கு கவுரவ முனைவர் பட்டம் வழங்குகிறார் மத்திய கல்வி, திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான். உடன், மத்திய அமைச்சர் எல்.முருகன், பல்கலைக்கழக வேந்தர் ஆர்.சேதுராமன் உள்ளிட்டோர். படம்: ஆர்.வெங்கடேஷ்

தஞ்சாவூர்: மத்திய அரசு அனைத்து மொழிகளையும் தேசிய மொழிகளாக அங்கீகரிக்கிறது என்றும் இதைத் தேசியக் கல்விக் கொள்கையும் நிரூபிக்கிறது எனவும் மத்திய கல்வி, திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 36-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தர்ஆர்.சேதுராமன் தலைமை வகித்தார். துணைவேந்தர் எஸ்.வைத்ய சுப்பிரமணியம் வரவேற்றார். மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், பல்கலைக்கழக முதன்மையர் (திட்டம் மற்றும் மேம்பாடு) எஸ்.சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாவது: புதிய கல்விக் கொள்கையில் அந்தந்த மாநிலங்களின் தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், மராட்டி, பஞ்சாபி, இந்தி, ஒடியா உட்பட அனைத்து இந்திய மொழிகளும் தேசிய மொழிகள் என பிரதமர் கூறுகிறார். மத்திய அரசு அனைத்து மொழிகளையும் தேசிய மொழிகளாக அங்கீகரிக்கிறது. இதைத் தேசியக் கல்விக் கொள்கையும் நிரூபிக்கிறது.

தொழில்நுட்பத்தில் இந்தியா மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அதில், டிஜிட்டல் இந்தியா திட்டமும் ஒன்று. நிகழாண்டு இறுதிக்குள் தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியா தற்சார்பு நிலையை எட்டும். இதேபோல, 2023-ம் ஆண்டுக்குள் நம்நாட்டிலுள்ள 6 லட்சம் கிராமங்களும் கண்ணாடி நாரிழை இணையவழியால் இணைக்கப்பட உள்ளன. இதன் மூலம் 25 கோடி வீடுகள் இணைக்கப்படும் என்றார்.

பின்னர், புளோரிடா பல்கலைக்கழகக் கணிதப் பேராசிரியர் கிருஷ்ணசாமி அல்லாடி, பாரதிய பாஷா சமிதி தலைவர் சாமு கிருஷ்ண சாஸ்திரி ஆகியோருக்கு கவுரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. 72 முனைவர் பட்டதாரிகள் உட்பட 4,100 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x