Published : 19 Sep 2022 06:26 AM
Last Updated : 19 Sep 2022 06:26 AM

குற்றச் செயல்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க நடவடிக்கை: தங்கும் விடுதிகளில் போலீஸார் சோதனை

சென்னை: குற்றச் செயல்களை முன் கூட்டியே கண்டறிந்து தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ரவுடிகள் மற்றும் சந்தேக நபர்கள் பதுங்கி உள்ளனரா எனத் தங்கும் விடுதி, மேன்ஷன்களில் போலீஸார் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் குற்றச் செயல்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கும் வகையில் தலைமறைவு குற்றவாளிகள், ரவுடிகளை கண்காணித்து அவர்களைக் கைது செய்யும் பணியை போலீஸார் தொடங்கியுள்ளனர்.

இதன்படி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி சென்னையில் உள்ள லாட்ஜ்கள், மேன்ஷன்களில் நேற்று முன்தினம் இரவு போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டனர். மேலும் முக்கிய இடங்களில் சிறப்பு வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

491 லாட்ஜ், மேன்ஷன்: சென்னை பெருநகரில் உள்ள 491 லாட்ஜ்கள், மேன்ஷன்கள் ஆகியவற்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, பழைய குற்றவாளிகள், சந்தேக நபர்கள் யாரேனும் தங்கியுள்ளார்களா? ஆயுதங்கள், போதைப் பொருட்கள் வைத்துள்ளனரா? என்று சோதிக்கப்பட்டது.

மேலும், சந்தேக நபர்கள் அல்லது பொருட்கள் குறித்து தகவல் தெரிந்தால் உடனே காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் எனத் தங்கும் விடுதி நிர்வாகிகளுக்கு போலீஸார் அறிவுரை வழங்கினர்.

மேலும், சிறப்பு வாகனத் தணிக்கையின்போது 3,978 இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் மற்றும் அவற்றில் பயணித்த நபர்கள் மீது சோதனை மேற்கொள்ளப்பட்டது.

முக அடையாள சோதனை: இச்சோதனையில் மதுபோதை, விதிமீறல் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களை ஓட்டியது தொடர்பாக 96 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், முக அடையாளத்தை கொண்டு குற்ற நபர்களை அடையாளம் காணும் நவீன (எப்ஆர்எஸ்) கேமரா மூலம் 2,236 பேரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சென்னை பெருநகர காவல் துறையின் இந்த சோதனைகள் தொடர்ந்து நடைபெறும். குற்ற நபர்கள் அல்லது சந்தேக நபர்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் பொது மக்கள் அதுகுறித்து உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவுரை வழங்கியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x