Published : 18 Sep 2022 06:59 PM
Last Updated : 18 Sep 2022 06:59 PM
மதுரை: ஃப்ளூ காய்ச்சல் தீவிரமாக பரவும்நிலையில் அரசு மருத்துவமனைகளில் மருந்து மாத்திரைகள் பற்றாக்குறை ஏற்படுகிறது, என்று எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்பி.உதயகுமார் தெரிவித்தார்.
மதுரையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''தற்போது உள்ள சீதோசன நிலையில் காற்றின் மூலம் ஸ்வைன் ஃப்ளூ, கரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. இரண்டுமே ஒரு வகையான காய்ச்சல். இதில் ஒருவர் தும்மினாலோ, இருமினாலோ அவரது சளி துகள்கள் காற்றில் கலந்து விடும். அதனைத் தொடர்ந்து அருகில் உள்ளவர்கள் சுவாசிக்கும் போது எளிதாக பாதிக்கப்படுகின்றனர். ஐந்து வயது முதல் 60 வயதிற்கு மேற்பட்டோர்களை இந்த காய்ச்சல் கடுமையாக பாதிக்கிறது. ரத்த அழுத்தம், சர்க்கரை, இதய பாதிப்பு போன்ற இணை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் பாதிப்பு ஏற்படுவதாகவும், குறிப்பாக மூச்சுத் திணறல் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தற்போது காலாண்டு தேர்வு காரணம் காட்டி மாணவர்கள் காய்ச்சலுடன் பள்ளிக்கு வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தி வருவதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்து இருக்கின்றனர்,
அண்டை மாநிலங்கள் கூட பள்ளிக்கூடம் விடுமுறை விட்டதாக தகவல் வருகிறது. தற்போது தொடர் மழை காரணமாக தொற்று பரவல் வேகமாக அதிகரிக்கும். காய்ச்சல் இருந்தாலும் மாணவர்கள் பள்ளிக்கு செல்லக்கூடாது என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர், ஆனால் மாத்திரை போட்டுக் கொண்டு காலாண்டு தேர்வுக்கு வரவேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இதனால் பாதிப்பு அடைந்த மாணவர்கள் வரும்போது அனைத்து மாணவர்களுக்கும் தொற்று நோய் ஏற்படும்,
தற்போது மருந்துகள் பற்றாக்குறை இல்லையென்று மக்கள் நல்வாழ்வுத்துறை தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறது. ஆனால் களநிலவரம் எளிய மக்கள் நம்பி செல்லும் அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் இருப்பு இல்லை. வெளியில் வாங்கிக் கொள்ளுங்கள் என்று மருத்துவர்கள், செவிலியர்கள் கூறுவதாக ஆதாரத்துடன் எங்களுக்கு தகவல் சொல்லிவருகின்றனர்.
காய்ச்சலை சரி செய்ய சிறப்பு கண்காணிப்பு வளையத்தை அமைக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கிராமப்புறங்களில் சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாமினை அரசு மேற்கொள்ள வேண்டும். மக்களின் அச்சத்தை போக்கும் கடமை அரசுக்கு உள்ளது. ஆகவே மக்களின் உயிரைக் காக்க அரசு முன் வரவேண்டும்.'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT