Published : 18 Sep 2022 12:07 PM
Last Updated : 18 Sep 2022 12:07 PM
சென்னை: சென்னையில் நோயைப் பரப்பும் சாக்கடைப் பள்ளங்களை உடனடியாக மூட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ''சென்னையில் மழைநீர் வடிகால்வாய் அமைப்பதற்காக பல இடங்களில் தோண்டப்பட்ட பள்ளங்களில் வாரக்கணக்கில் கட்டுமானப் பணிகள் நடைபெறவில்லை. பல இடங்களில் கழிவுநீர் குழாய்கள் உடைந்து அந்த பள்ளங்களில் மழைநீரும், கழிவுநீரும் கலந்து சாக்கடையாக மாறிக் கிடக்கின்றன.
சாலைகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், குடியிருப்புகள் ஆகியவற்றுக்கு அருகில் உருவாகியுள்ள சாக்கடைகள் கொசுக்களும், கிருமிகளும் உருவாகி நோயைப் பரப்பி வருகின்றன. சென்னையில் அண்மைக்காலமாக பரவும் காய்ச்சலுக்கு இந்த சாக்கடை பள்ளங்களும் காரணம் என்பதை மறுக்க முடியாது.
மழைநீர் கால்வாய் பணிகளுக்காக பள்ளங்கள் தோண்டியதில் தவறு இல்லை. ஆனால், பல இடங்களில் வாரக்கணக்காக அந்த பள்ளங்களில் பணிகள் நடக்காமல் இருப்பதும், மழைநீரும், கழிவுநீரும் தேங்கும் அளவுக்கு மாநகராட்சி அலட்சியமாக இருந்ததும் நியாயப்படுத்த முடியாத தவறுகள்.
சென்னையில் தோண்டப்பட்டுள்ள பள்ளங்களில் மழைநீர் கால்வாய் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; அதற்கு வாய்ப்பில்லாத இடங்களில் உடனடியாக பள்ளங்களை மூட வேண்டும். அதன் மூலம் சென்னையில் நோய்பரவுவதை கட்டுப்படுத்த வேண்டும்.'' இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT