Published : 18 Sep 2022 04:20 AM
Last Updated : 18 Sep 2022 04:20 AM

சென்னை, வேளச்சேரி, பெருங்களத்தூரில் ரூ.115 கோடியில் கட்டப்பட்ட பாலங்கள் திறப்பு

சென்னை

வேளச்சேரி மற்றும் பெருங்களத்தூரில் ரூ.115 கோடியே 49 லட்சத்தில் கட்டப்பட்ட பாலங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக நேற்று திறந்து வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின்கீழ், ரூ.145.49 கோடியில்வேளச்சேரியில் விஜயநகர் சந்திப்பில் தரமணி சாலை, தாம்பரம் - வேளச்சேரி சாலை மற்றும் வேளச்சேரி புறவழிச்சாலையை இணைத்து மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இப்பணி 2 அடுக்குமேம்பாலங்களாக ஒவ்வொன்றும் 7.5 மீட்டர் அகலம் கொண்ட இரு வழித்தட, ஒருவழி மேம்பாலமாக அமைக்கப்பட்டு வருகிறது.

இதில் தரமணி இணைப்பு சாலை, வேளச்சேரி புறவழிச்சாலையை இணைத்து 1,028 மீட்டர் நீளத்தில் ரூ.67 கோடியில் 2-ம் அடுக்கு மேம்பாலப் பணி முடிந்து,மக்கள் பயன்பாட்டுக்காக கடந்தஆண்டு நவ.1-ம்தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக தற்போதுவேளச்சேரியில், ரூ.78.49 கோடிசெலவில் வேளச்சேரி புறவழிச்சாலை - வேளச்சேரி – தாம்பரம் சாலையை இணைத்து 640 மீட்டர் நீளத்தில் முதல் அடுக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், செங்கல்பட்டு மாவட்டம், பெருங்களத்தூரில், சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின்கீழ், ரூ.37 கோடியில் பெருங்களத்தூர் ரயில்வே மேம்பாலத்தின் செங்கல்பட்டு – சென்னை பாலப்பகுதி கட்டப்பட்டுள்ளது.

இந்த மேம்பாலம் நீள்வட்ட சுற்றுப்பாதையுடன் கூடிய 4 பாலப்பகுதியை உடையது. இதில் ஒருபாலப்பகுதி சென்னை – செங்கல்பட்டு வழித்தட போக்குவரத்துக்கும், மற்றொரு பாலப்பகுதி செங்கல்பட்டு – சென்னை போக்குவரத்துக்கும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், சீனிவாசராகவன் தெரு பகுதிக்கு ஒரு பாலப்பகுதியும், தாம்பரம் கிழக்கு புறவழிச் சாலை பகுதிக்கு மற்றொரு பாலப்பகுதியும் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் செங்கல்பட்டு – சென்னை பாலப்பகுதி 743 மீட்டர் நீளமும், 7.5 மீட்டர் அகலமும் கொண்ட இருவழித்தட, ஒருவழி மேம்பாலப் பணி முடிக்கப்பட்டுள்ளது.

வேளச்சேரி மற்றும் பெருங்களத்தூரில் ரூ.115 கோடியே 45 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள2 பாலங்களின் திறப்பு விழாசென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, காணொலி வாயிலாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பாலங்களைத் திறந்து வைத்தார்.

வேளச்சேரி பாலம் திறக்கப்பட்டுள்ளதால், வேளச்சேரி விஜயநகர் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் குறையும். பெருங்களத்தூரில் திறக்கப்பட்ட பாலத்தால் தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு – சென்னை மார்க்கத்தில் பெருமளவு போக்குவரத்து நெரிசல் குறையும்.

மேலும் தமிழகத்தின் தென்பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் மற்றும் தாம்பரம், சென்னை விமான நிலையம், கிண்டி,கோயம்பேடு மற்றும் சென்னையின் இதர பகுதிகளைச் சேர்ந்த மக்களும் மிகுந்த பயனடைவார்கள்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, நெடுஞ்சாலைகள் துறை செயலர் ரதீப் யாதவ் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x