Published : 18 Sep 2022 04:40 AM
Last Updated : 18 Sep 2022 04:40 AM

சர்வதேச கடற்கரை தூய்மை தினம்: சென்னை கடற்கரைகளில் 10,000 பேர் தூய்மைப் பணி

சர்வதேச கடற்கரை தூய்மை நாளையொட்டி, தூய்மைப் பணி திட்டத்தை மத்திய அமைச்சர் எல்.முருகன் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் தொடங்கி வைத்து தன்னார்வல அமைப்பினருடன் இணைந்து குப்பை களை அகற்றும் பணியில் ஈடுபட்டார். படம்: பு.க.பிரவீன்

சென்னை

சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தையொட்டி, சென்னையில் உள்ள கடற்கரைகளில் நேற்று 10 ஆயிரம் பேர் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். கடலைப் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சர்வதேச கடற்கரை தூய்மைதினத்தையொட்டி மத்திய புவிஅறிவியல் அமைச்சகம், தேசியபெருங்கடல் தொழில்நுட்பக்கழகம், மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் ஆகியவை இணைந்து “தூய்மையான கடற்கரை - பாதுகாப்பான கடல்” என்ற தலைப்பில் கடற்கரைதூய்மைப் பணியை மேற்கொண்டன.

இதன்படி, பெசன்ட் நகர் கடற்கரையில் நேற்று காலை நடைபெற்ற தூய்மைப் பணியில் கல்லூரி, பள்ளி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். அவர்களுடன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் இணைந்து குப்பையை அகற்றி, தூய்மைப்படுத்தினார்.

மேலும், விழிப்புணர்வு மாரத்தான் போட்டியைத் தொடங்கிவைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். இதேபோல, மெரினா கடற்கரையில் நடைபெற்ற தூய்மைப் பணியில் பங்கேற்றோர், குப்பையை அகற்றிய பிறகு, கடற்கரைகளில் இனி குப்பை போட மாட்டோம் என்று உறுதிமொழி ஏற்றனர்.

மேலும், கடற்கரை தூய்மை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனித சங்கிலி அமைத்தனர். இவ்வாறு, மெரினா கடற்கரை முதல் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளம் கடற்கரை வரை 44 இடங்களில் நேற்று தூய்மைப் பணி நடைபெற்றது.

இதில், 10 ஆயிரம் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்று, கடற்கரைகளைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

பின்னர் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கடல் வளத்தைப் பாதுகாக்கவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் நாடு முழுவதும் உள்ள75 கடற்கரைகளை சுத்தம் செய்து வருகிறோம்.

ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களால் கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழக்கின்றன. அவற்றைப் பாதுகாக்க கடற்கரை, கடலைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

பிரதமர் மோடியின் பிறந்த தினத்தை முன்னிட்டு 2 வாரங்களுக்கு சேவை வாரமாகக் கொண்டாடப்படுகிறது. சமூக நீதி குறித்துபேசுவதுடன், இதை நடைமுறைப்படுத்தி வருகிறார் பிரதமர் மோடி. எனவே, உண்மையான சமூக நீதி நாளாக பிரதமர் மோடியின் பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x