Published : 18 Sep 2022 04:50 AM
Last Updated : 18 Sep 2022 04:50 AM

கரூர் | அனுமதி பெறாமல் இயங்கும் கல் குவாரிகள் - உண்மை கண்டறியும் குழு வெளியிட்ட தகவல்கள்

கரூர்

கரூர் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் கல் குவாரிகள் குறித்து விசாரிக்க சிறப்பு நிபுணர் குழுவை அமைத்து, தமிழக முதல்வரே நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும் என உண்மை கண்டறியும் குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கரூர் மாவட்டம் குப்பம் அருகேயுள்ள காளிபாளையம் வெட்டுக்காட்டு தோட்டத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன்(49). அப்பகுதியில் உள்ள தனியார் கல் குவாரிக்கு எதிராக போராடி வந்த இவர், செப்.10-ம் தேதி அக்குவாரிக்குச் சொந்தமான வேனால் மோதப்பட்டு, கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், இந்தக் கொலை தொடர்பாக, திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த மனிதநேய மக்கள் கட்சி எம்எல்ஏ அப்துல்சமது, மக்கள் சிவில் உரிமைக் கழக தேசியச் செயலாளர் வழக்கறிஞர் ப.பாலமுருகன்,

சுயஆட்சி இந்தியா கட்சி தேசியத் தலைவர் கிறிஸ்டினா, பூவுலகின் நண்பர்கள் இயக்கம் ஆர்.ஆர்.சீனிவாசன், மக்கள் கண்காணிப்பகம் மோகன், தமிழ்த் தேச மக்கள் முன்னணி வழக்கறிஞர் கென்னடி, மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு ஐ.ஆசிர், மக்கள் சிவில் உரிமைக் கழக மாநிலத் தலைவர் வழக்கறிஞர் வின்சென்ட் உள்ளிட்டோரைக் கொண்ட உண்மை கண்டறியும் குழுவினர் நேற்று காளிபாளையம்

வெட்டுக்காட்டுதோட்டத்தில் உள்ள ஜெகநாதன் மனைவி ரேவதியிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, கல் குவாரி மற்றும் கொலை நிகழ்ந்த இடத்தைப் பார்வையிட்டனர். கொலை நிகழ்ந்த பகுதியின் அருகேயுள்ள நில உரிமையாளர் சண்முகம் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து கரூரில் செய்தியாளர்களிடம் இக்குழுவினர் தெரிவித்தது:

ஜெகநாதன் மீது ஏற்கெனவே தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் கூட்டுச்சதி உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். கல் குவாரிகள் செயல்படுவதற்கான அனுமதி குறித்து, குவாரிகளின் முன்பு எந்த விவரமோ, அறிவிப்போ இல்லை.

இது மிகப்பெரிய சட்டவிரோதம். ஆட்சியர் சொல்லும் பட்டியலை மட்டுமே ஏற்காமல், சுதந்திரமாக செயல்படக்கூடிய சிறப்பு நிபுணர் குழுவை அமைத்து, அனுமதி பெறாத கல் குவாரிகள் குறித்து தமிழக முதல்வரே நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும்.

குவாரிகளில் 350 அடிக்கு மேல் பாதாள குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அனுமதி அளிக்கப்பட்ட அளவை மீறி வெடி வைத்து பாறைகள் தகர்க்கப்படுகின்றன.

எனவே, கரூர் மாவட்டத்தில் செயல்படும் சட்டவிரோத கல்குவாரிகள் குறித்தும், அனுமதி பெற்ற கல் குவாரிகள் செய்யும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்தும் நிபுணர் குழு அமைத்து விசாரித்து, வெள்ளை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். சமூக ஆர்வலர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

கரூரில் செயல்படும் சட்ட விரோத கல் குவாரிகள் குறித்த எங்களின் ஆய்வறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படும்.

சட்டப்பேரவையில் இது குறித்து விவாதிக்கப்படும். ஜெகநாதன் குடும்பத்துக்கு அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x