Published : 18 Sep 2022 04:55 AM
Last Updated : 18 Sep 2022 04:55 AM

திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் நிறைமாத கர்ப்பிணி அலைக்கழிப்பு

தூத்துக்குடி

திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் நிறைமாத கர்ப்பிணி பெண் அலைகழிக்கப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திருச்செந்தூர் பள்ளத்தெருவை சேர்ந்த ரவி மனைவி கற்பகம் என்ற வள்ளி. இவரது மகள் துர்காவுக்கும் (21) ரமேஷ் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

கணவருடன் சென்னையில் வசித்து வரும் துர்கா கர்ப்பமானதால் சில மாதங்களுக்கு முன் தனது தாயார் வீட்டுக்கு வந்தார். நிறைமாத கர்ப்பிணியான அவர், கடந்த 14-ம் தேதி பிரசவத்துக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் துர்காவுக்கு நேற்று முன்தினம் மதியம் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பணியி லிருந்த மருத்துவரிடம் தெரிவித்ததற்கு உடல் வெப்பத்தால் ஏற்பட்ட வலியாக இருக்கலாம் என்றும் தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் எடுத்து வருமாறும் சொல்லி அனுப்பியுள்ளனர்.

ஸ்கேன் எடுத்து பார்த்ததில் இன்னும் சில மணி நேரத்தில் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்ததையடுத்து மீண்டும் அரசு மருத்துவமனைக்கு வந்து ஸ்கேன் அறிக்கையை கொடுத்துள்ளனர்.

அங்கிருந்த மருத்துவர், துர்காவை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறும், வழியில் ஏதாவது விபரீதம் நடந்தால் அதற்கு நீங்களே பொறுப்பு என எழுதி கொடுக்கச் சொன்னதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து பிரசவ வலியுடன் துர்காவும் அவரது தாயார் வள்ளியும் திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்தனர்.

அங்கு அனுமதிக்கப்பட்ட துர்காவுக்கு நேற்று மதியம் சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இதற்கிடையே நிறைமாத கர்ப்பணி பெண் பிரசவத்துக்காக அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் பொன்இசக்கி, திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து மருத்துவர்கள் மற்றும் பிரசவ வார்டு பணியாளர்களிடம் விசாரணை நடத்தினார்.

பின்னர் அவர் தனியார் மருத்துவமனைக்கு சென்று துர்கா, அவரது தாயார் வள்ளி ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் நிறைமாத கர்ப்பிணி துர்காவுக்கு நடந்த சம்பவம் குறித்து பேறுகால மருத்துவ நிபுணரை கொண்டு முழு விசாரணை நடத்தப்படும். யார் தவறு செய்திருந்தாலும் துறை ரீதியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

அந்த பெண்ணுக்குரிய பிரவச செலவு குறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை நடத்தி உரிய ஏற்பாடு செய்யப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x