Published : 03 Nov 2016 10:39 AM
Last Updated : 03 Nov 2016 10:39 AM

உள்ளாட்சி 30: தமிழக ஊராட்சிகள் சட்டத்தில் 74-வது திருத்தம் எங்கே போனது?

நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது பஞ்சாயத்து ராஜ்ஜியம் சட்டம் நிறைவேற்றப்பட்டது. சரி, அதற்கு முன்பாக நாட்டில் பஞ்சாயத்துமுறையே இல்லையா? இருந்தது. ‘ராம ராஜ்ஜியம்’ இருந்ததாக காந்தி நம்பினார். சங்க காலத்தில் தமிழகத்தில் பஞ்சாயத்துக்கள் இருந்ததற்கு கல்வெட்டு ஆதாரங்கள் உண்டு. சுதந்திரம் பெறுவற்கு முன்னர் 1687 முதல் 1947 வரை ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்திலும் நிர்வாகரீதியான பஞ்சாயத்துக்கள் ஏற்படுத்தப் பட்டன.

ஆனால், 1992-ம் ஆண்டு 73, 74-வது அரசியல் சாசனத் திருத்த மசோதா நிறை வேற்றுவதற்கு முன்பு இருந்த பஞ்சாயத் துக்கள் அனைத்தும் பொம்மைப் பஞ்சாயத் துக்கள். அரசுகள் நினைத்தால் கொலு வைத்துக் கொண்டாடலாம். வேண்டாம் என்று கருதினால் கலைத்துவிடலாம். பஞ்சாயத்துத் தேர்தல் நடத்தலாம். நடத்தாமலும் போகலாம். பஞ்சாயத் துக்களுக்கு சட்டப்பூர்வமான பாதுகாப்பு கிடையாது. ஆனால், இந்தச் சட்டம் அமல்படுத் தப்பட்ட பிறகு அப்படி செய்ய இயலாது. இன்றைக்கு நீதிமன்றம் மூலம் பஞ்சாயத்துத் தேர்தல் தடை செய்யப்பட்டுள்ள சூழலுக்கும் இது பொருந்தும். அதனால்தான் டிசம்பர் மாதத்துக்குள் தேர்தல் நடத்தியாக வேண்டும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. கிட்டத்தட்ட இதேபோன்றதொரு சூழல்தான் 1993-ம் ஆண்டு சட்ட திருத்தம் அமல்படுத்தப்பட்ட பிறகும் தமிழகத்தில் நிலவியது.

அரசியல் சாசனத் திருத்த மசோதா அமல்படுத்தப்படுத்தப்பட்ட பின்பு அதனை மாநிலங்கள் அமல்படுத்த கால அவகாசம் அளிக்கப்பட்டது. சரியாக ஒரு ஆண்டு கழித்து முதல் மாநிலமாக 1994, மே மாதம் 30-ம் தேதி புதிய பஞ்சாயத்து அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தியது மத்தியப்பிரதேசம். அடுத்தடுத்த மாதங்களில் மேலும் பல மாநிலங்கள் பஞ்சாயத்துத் தேர்தல்களை நடத்தின. 1994, ஏப்ரல் 24-ம் தேதிக்குள் பஞ்சாயத்து ராஜ்ஜியம் சட்டத்தை இயற்றியாக வேண்டும். அதனைத் தொடர்ந்து தேர்தலும் நடத்த வேண்டும்.

தமிழகத்திலோ அசைவையே காணோம். அப்போது அதிமுக ஆட்சியில் இருந்தது. காலக்கெடு முடிய இன்னும் சில நாட்களே இருந்தன. அப்போது நரசிம்மராவை சந்தித்த பத்திரிகையாளர்கள், “தமிழகத்தில் இன்னமும் பஞ்சாயத்து ராஜ்ஜியம் தொடர்பான சட்டம் இயற்றப்படவில்லையே?” என்று கேள்வி எழுப்பினார்கள். “அது அரசியல் சாசன சட்டத்தையே அவமதிக்கும் செயல்” என்றார் அவர். பத்திரிகையாளர்கள், “அப்படி என்றால்...” என்று இழுத்தார்கள். “அதன் அர்த்தம் என்னவென்று புரிய வேண்டிய வர்களுக்குப் புரியும்” என்றார்.

புரிந்துகொண்டார்கள். துள்ளி எழுந்தது தமிழக அரசு. அவசரகதியில் வேலைகள் நடந்தன. 1958-ம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்துக்கள் சட்டத்தில் ஏற்கெனவே கிராமப் பஞ்சாயத்துக்கள் மற்றும் ஒன்றியங்களுக்கான ஷரத்துக்கள் இருந்தன. அதனுடன் மாவட்டப் பஞ்சாயத்துக்கான ஷரத்துகளையும் சேர்த்தார்கள். கூடவே மாவட்ட திட்டக் குழுவையும் இணைத்தார்கள். 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் (21/1994) தயார். சட்டம் தயாரித்து முடித்தபோது கெடு முடிய இன்னும் ஓரிரு நாட்களே இருந்தன. சுமார் 250 பக்கங்கள் கொண்ட சட்டப் பிரதி அது. சட்டப் பிரதியின் நகல் மக்கள் பிரதிநிதிகளுக்கு விநியோகிக்கப்பட்டது. பரிதி இளம்வழுதி, “ஒரே நாளில் எப்படி இவ்வளவையும் படித்து முடித்து விவாதம் செய்வது?” என்று கேள்வி எழுப்பினார். ஒருவழியாக 1994, ஏப்ரல் 24-ம் தேதி கடைசி நேரத்தில் சட்டம் நிறைவேறியது.

ஆனாலும் பஞ்சாயத்துத் தேர்தலை நடத்த முனைப்பு காட்டவில்லை மாநில அரசு. இரு ஆண்டுகள் ஓடின. 1996-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியது. ‘நாங்கள் வந்தால் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவோம்’ என்று எல்லாக் கட்சிகளுமே தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தன. 1996 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. 1996-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழகத்தில் புதிய பஞ்சாயத்துக்களுக்கு தேர்தல் நடந்தது. பஞ்சாயத்துத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். நாடு முழுவதும் படிப்படியாக உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்தன. கடைசி மாநிலமாக 2001-ல் பிஹார் தேர்தல் நடத்தியது. இந்தியாவில் மீண்டும் மலர்ந்தது புதிய பஞ்சாயத்து ராஜ்ஜியம். இங்கே ராஜீவ் காந்தியின் கேள்விக்கு பதில் கிடைத்தது. சுமார் 120 கோடி மக்களை சுமார் 32 லட்சம் மக்கள் பிரதிநிதிகள் கவனித்துக் கொள்கிறார்கள். 5,700 பேர் எங்கே? 32 லட்சம் பேர் எங்கே? நுண்மையான நிர்வாகம் இல்லையா இது!

தமிழகத்தின் கதைக்கு வருவோம். தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் ஊரகம் மற்றும் நகர்ப்புறம் இரண்டுக்குமே பொருந் தும்; பொதுவானது என்று பலரும் நினைத் துக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அப்படிதான் இருந்திருக்க வேண்டும். ஆனால், இன்று அப்படி இல்லை. சட்டத் துறையிலும் ஊரக வளர்ச்சித் துறையிலும் இருக்கும் உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் இது. அரசியல் சாசன சட்டத் திருத்தம் 73-வது பிரிவு ஊரக உள்ளாட்சிகளுக்கானது. 74-வது சட்டப் பிரிவு நகர்ப்புற உள்ளாட்சிக்களுக்கானது. ஒரு மாநில அரசு ஊராட்சிகள் சட்டம் இயற்றும்போது இரண்டு அரசியல் சாசனத் திருத்த சட்டங்களுக்கும் உரித்தான ஊராட்சி சட்டங்களை உருவாக்க வேண்டும். ஆனால், அன்றைக்கு அவசர கோலத்தில் 73-வது பிரிவை மட்டுமே உள்ளடக்கி தமிழ்நாடு ஊராட் சிகள் சட்டம் உருவாக்கப்பட்டது. 74-வது பிரிவை அம்போவென விட்டுவிட்டார்கள்.

திமுக ஆட்சிக்கு வந்த பின்பும் இதனை கவனிக்கவில்லை. இரண்டுக்கும் சேர்த்தே உள்ளாட்சித் தேர்தலை நடத்தினார்கள். தமிழகத்தில் கிராமப் புற உள்ளாட்சிகள் புதிய சட்டத்தின்படி ஆட்சி நடத்தத் தொடங்கின. நகர்ப்புற உள்ளாட்சிகளின் நிர்வாகம் பழைய நகர்ப்புற உள்ளாட்சி சட்டங்களின்படியே நடக்கத் தொடங்கின. விளைவு? ஒவ்வொரு மாநகராட்சிக்கும் தனித் தனி சட்டங்கள். சென்னை மாநகராட்சிக்கு ஒரு சட்டம். மற்றும் மதுரை மாநகராட்சிக்கு ஒரு சட்டம், கோவை மாநகராட்சிக்கு ஒரு சட்டம், நெல்லை, திருச்சி மாநகராட்சிகளுக்கு ஒரு சட்டம். நகராட்சிகளுக்கு ஒரு சட்டம். ஊருக்கு ஊர் விதிமுறைகள் வேறுபட்டன. அதிகாரங்களும் மாறுபட்டன. சட்டம் என்பது எல்லோருக்கும் எல்லா இடங்களுக்கு பொதுவானதாகத்தானே இருக்க வேண்டும்? எவ்வளவு பெரிய அபத்தம் இது.

அப்போதுதான் உள்ளாட்சிப் பிரதிநிதி களுக்கான பயிற்சிப் பட்டறை ஒன்று நடந்தது. பயிற்சி எடுக்க சென்றிருந்தவரிடம் உள்ளாட்சித் தலைவர்கள் இந்தக் கேள்வியை முன் வைத்தார்கள். பதில் அளித்தவர், உண்மையைப் போட்டு உடைத்தார். இது பத்திரிகைகளில் செய்தியானது. விவாதங்கள் எழுந்தன. அன்றைக்கு தலைமைச் செயலராக இருந்த மாலதி ஐ.ஏ.எஸ்., இதை அன்றைய முதல்வர் கருணாநிதியின் கவனத்துக்கு கொண்டுச் சென்றார். “உண்மை என்றால் தக்க நடவடிக்கை எடுக்கவும்” என்றார் அவர். 1997-98 தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் உருவாக்கப்பட்டது.

எல்லா மாநகராட்சிகளுக்கு ஒரே சட்டம். ஒரே விதிமுறைகள். ஒரே அதிகாரங்கள் உருவாக் கப்பட்டன. அடுத்து நடந்ததுதான் கேலிக் கூத்து. சென்னை மேயரும் நெல்லை மேய ரும் ஒன்றா? இருவருக்கும் ஒரே அதிகாரமா? என்று கிளப்பினார்கள் உடன்பிறப்புகள்? என்ன நடந்திருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கிடப்பில் போடப் பட்டது அந்தச் சட்டம். இந்த நிமிடம் வரை தமிழகத்தின் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு சட்டம் கிடையாது. பாதுகாப்பு கிடை யாது. சொல்லப்போனால் நகர்ப்புற உள்ளாட்சி களான பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட் சிகளுக்கு தேர்தல் நடத்தாமல் போனால்கூட சட்டப்படி கேள்வி கேட்க இயலாது!

பிரிக்ஸ் மாநாட்டில் வாசிக்கப்படும் உள்ளாட்சி... உங்கள் உள்ளங்களின் ஆட்சி!

பிரிக்ஸ் இரண்டாம் நிலை மாநாடு இன்று முதல் வரும் 5-ம் தேதி வரை கொச்சினில் நடக்கிறது. கோவாவில் நடந்த அரசியல் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான முதல் நிலை மாநாட்டில் சீனா, ரஷ்யா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளின் அதிபர்கள் கலந்துகொண்டனர். பிரதமர் மோடி கலந்துகொண்டார். தற்போதை இரண்டாம் நிலை மாநாடு ‘பங்கேற்பு நிதி நிலை அறிக்கையும் உள்ளாட்சி வளர்ச்சியும்’ என்கிற தலைப்பில் நடக்கிறது. இதில் சீனா, ரஷ்யா, பிரேசில், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர். மாநாட்டில் திண்டுக்கல் காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறைக்கு ஓர் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. ‘இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் உள்ளாட்சிகளின் வளர்ச்சி’ என்கிற தலைப்பில் பேசவிருக்கும் அந்தத் துறையின் பேராசிரியர் பழனிதுரை தற்போது ‘தி இந்து’ நாளிதழில் வெளியாகிக்கொண்டிருக்கும் ‘உள்ளாட்சி... உங்கள் உள்ளங்களின் ஆட்சி’ தொடரின் சாராம்சத்தை மாநாட்டில் வாசிக்கவிருக்கிறார்!

- பயணம் தொடரும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x