Published : 17 Sep 2022 05:43 PM
Last Updated : 17 Sep 2022 05:43 PM
புதுச்சேரி: கேரளாவில் நடந்த தென்மாநில முதல்வர்கள் கூட்டத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி புறக்கணிக்கப்படவில்லை என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை விளக்கமளித்துள்ளார்.
சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தையொட்டி ‘தூய்மையான கடற்கரை-பாதுகாப்பான கடல்’ இயக்கத்தின் ஒரு பகுதியாக புதுச்சேரி கடற்கரை தூய்மை இன்று நடைபெற்றது. இப்பணியை புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த கல்வித் துறை நடத்திய பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார். இதில் ஆளுநர் தமிழிசை பேசியது: ‘‘பிரதமரின் பிறந்த நாளான இன்று தூய்மை பாரத திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சியை நடத்துவதில் பெருமை கொள்கிறோம். ஏனென்றால் சுத்தமும், சுகாதாரமும் தான் நாட்டில் நோயை தடுக்கும்.
இன்று சர்வதேச கடற்கரை தூய்மை தினம். இதற்கு முன்பாக 75 இடங்களில் 7,500 கிலோ மீட்டர் நீள கடற்கரை பகுதி சுத்தம் செய்யப்பட்டிருக்கிறது என்பது இந்த நாட்டின் சாதனை. இந்த தூய்மை பணியில் ஈடுபட்ட பொதுமக்கள், அதிகாரிகள், மாணவ, மாணவிகள் அனைவருக்கும் வணக்கத்தை தெரிவித்துக் கொள்ள வேண்டும்.
கடற்கரையை சுத்தமாக வைத்துக் கொள்வது கடல் வாழ் உயிரினங்களுக்காக மட்டுமல்ல நிலத்தில் வாழும் நமக்காகவும் தான். கடற்கரையில் பல இடங்களில் ஐஸ்கிரீம் கப், கரண்டி, தண்ணீர் பாட்டில், பிளாஸ்டிக் பைகள் எறியப்படுகிறது. இவையெல்லாம் கடலுக்கு போவதில்லை, நம்முடைய உடலுக்கு திருப்பி வருகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாம் போடும் பிளாஸ்டிக் பொருட்களை மீன்கள் சாப்பிட்டு அந்த மீன்களை நாம் உண்ணும்போது அது புற்றுநோயாக நமக்கு வெளிப்படுகிறது. நமது உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்கிறோம் என்ற எண்ணம் நமக்கு வேண்டும்.
மேலும், கடல் நீர் மாசுபடும் போது சுற்றுச்சூழலை அதிகம் பாதிக்கிறது. இதை அனைத்தையும் மனதில் வைத்து கடற்கரையைத் தூய்மைப்படுத்துவது மட்டுமல்லாமல், வருங்காலத்தில் கடற்கரையில் பிளாஸ்டிக் கழிவு பொருட்களை நாம் எறிவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். கடல் வாழ் உயிரினங்கள் கடலின் சுற்றுச்சூழலை பாதுகாக்கின்றன. கடல் வாழ் உயிரினங்கள் இறந்து போனால் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும். மனிதகுலம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதற்கு கடற்கரை பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், மாவட்ட ஆட்சியர் வல்லவன், அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல்துறை செயலர் முத்தம்மா, டிஜிபி மனோஜ் குமார் லால், அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல்துறை இயக்குநர் பிரியதர்ஷினி, இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
எங்கேயும் முதல்வர் புறக்கணிக்கப்படவில்லை: பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த ஆளுநர் தமிழிசையிடம், கேரளாவில் நடந்த தென்மாநில முதல்வர்கள் கூட்டத்தில் பங்கேற்க புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு அழைப்பு விடுக்காமல் புறக்கணிகப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கூறிய குற்றச்சாட்டு குறித்து கேட்டபோது, ‘‘எங்கேயும் முதல்வர் புறக்கணிக்கப்படவில்லை. இருவருக்குமே அழைப்பு வந்தது. முதல்வர் ஏதோ காரணத்தால் கலந்து கொள்ளவில்லை. தென் மாநில முதல்வர்கள் கூட்டத்தில் நான் கலந்து கொண்டு புதுச்சேரிக்கு என்னென்ன வேண்டுமோ, அதையெல்லாம் தெளிவாக எடுத்து வைத்துள்ளேன். புதுச்சேரிக்காக ஆளுநர் சென்று பங்கெடுத்து கொண்டார் என்று மகிழ வேண்டுமே தவிர, ஏதோ புறக்கணிக்கப்பட வேண்டியவர் ஆளுநர் என்று பேசக்கூடாது. மக்களுக்காகத்தான் அந்த கூட்டத்தில் பங்கேற்றேன்’’ என்றார்.
தொடர்ந்து அவர், "குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் அவர்களை சுத்தமான இடத்தில் பராமரித்து ஊட்டச்சத்துள்ள உணவை கொடுக்க வேண்டும். மற்ற குழந்தைகளுக்கும் காய்ச்சல் பரவாமல் அவர்களை பாதுகாத்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். குழந்தைக்கு தொற்றுகின்ற நோயாக இருப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் யாரும் பயப்பட வேண்டாம்’’ என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT