Published : 17 Sep 2022 03:07 PM
Last Updated : 17 Sep 2022 03:07 PM

மழைநீர் வடிகால் பணி என்ற பெயரில் சென்னை நாசமாகிறது: தமிழக பாஜக குற்றச்சாட்டு

நாராயணன் திருப்பதி | கோப்புப்படம்

சென்னை: "ஊழலும், லஞ்சமும் இன்றி இந்த நிர்வாகத்தில் எந்தப் பணியினையும் முழுமையாக நிறைவாக செயல்படுத்த முடியாது என்பதற்கு மழைநீர் வடிகால் பணி ஒன்றே சாட்சி. இதே நிலைதான் வேலூர், கோவை போன்ற அனைத்து மாநகராட்சிகளிலும் உள்ளது" என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "சிங்கார சென்னை அலங்கோல சென்னையாக மாறிக் கொண்டிருக்கிறது. மழைநீர் வடிகால் பணி என்ற பெயரில் சென்னையை நாசமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். சென்னையின் தெருக்கள் முழுவதும் மரணப் பள்ளங்களும், படுகுழிகளும் நிரம்பிக் கிடக்கின்றன.

மக்கள் கடும் அவதியில் இருப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கும், செவிகளுக்கு எட்டாமல் இருப்பது கொடூரம். முறையாக திட்டமிடாத பணியினால், பல தெருக்களில் சேற்று மணல் குவியல்கள். சில நாட்களில் பெய்த சிறு மழையின் காரணமாக அந்தப் பள்ளங்களில் நீர் தேங்கி கொசுக்களின் உற்பத்தி மையமாகி டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மழைநீர் வடிகால்வாய் அமைப்பதற்காக பள்ளங்கள் தோண்டுகையில், பல வீடுகளின் குடிநீர் இணைப்பு, தொலைபேசி இணைப்பு, இணைய இணைப்பு போன்றவற்றைத் துண்டித்து அல்லது சேதப்படுத்தி வருவது கொடுமையானது.

இதுகுறித்து புகாரையோ அல்லது தீர்வையோ எட்டமுடியாது மக்கள் விழி பிதுங்கி போயிருக்கிறார்கள். பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள மாநகராட்சி அதிகாரிகளை காண முடிவதில்லை, தொடர்புகொள்ள முடிவதில்லை. நான் வசிக்கும் அடையாறு பகுதியில் உள்ள பிரச்சினைகளை சொல்வதற்கு என் பகுதியில் பணிபுரியும் உதவி பொறியாளரும், மண்டல பொறியாளரும் அலைபேசியில் அழைத்தும் பேசுவதில்லை என்பது கொடூரம்.

வருகிற நாட்களில் சிறு மழை பெய்தாலே தெருக்கள் அனைத்தும் சேறு நிறைந்த குளங்களாகிவிடும் அபாயம் உள்ள நிலையில், இதுகுறித்து கவலைப்பட யாருமில்லை. இந்த பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களில் 90 சதவீதத்தினர் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இயந்திரம் போல் பணியாற்றுகிறார்களே தவிர நிலையை உணர்ந்து பணியாற்றுவது இல்லை. சில தெருக்களில் நுழையவே முடியாத அளவிற்கு சாலையின் இரு பக்கமும் பள்ளங்களை வெட்டி விடுகிறார்கள்.

இதுகுறித்து தொழிலாளர்களை கண்காணிக்கும் நபர்களை கேள்வி கேட்டால் மிரட்டும் தொனியில் ரவுடித்தனமாக பேசுகிறார்கள். ரவுடிகளை வைத்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் ஒப்பந்ததாரர்கள். இந்த மிரட்டல்கள் குறித்து பகுதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாலும், கண்டுகொள்வார் யாரும் இல்லை என்பது உண்மையில் கொடுமையிலும் கொடுமை. திமுக ஆட்சியில் ரவுடிகளின் தலைநகரமாக சென்னை விளங்கிக்கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட சான்று தேவையில்லை.

அவசர அவசரமாக அள்ளித்தெளித்த நீர்கோலம் போல, கலவர மயமாக இந்த பணிகளை செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று மாநகராட்சி அதிகாரிகள் சிலரிடம் கேட்டேன். அதற்கு அவர்களின் பதில் வியப்பை அளித்தது. மழைநீர் வடிகால்வாய் பணிக்கான ஒப்பந்தம் கடந்த ஆட்சியில் செய்யப்பட்டதாகவும், அடுத்த வருடம் வரை இந்த ஒப்பந்தங்களுக்கான கால அவகாசம் உள்ளதாகவும், ஏற்கெனவே ஒப்பந்த பணியின் தொகையில் பெரும் பகுதியை லஞ்சமாக கொடுத்து பணியை பெற்றவர்களிடம் மேலும் பன்மடங்கு சதவீதம் செலுத்துமாறு வற்புறுத்தப்படுவதாகவும், இல்லையேல் ஒப்பந்தத்தை ரத்து செய்து விடுவதாகவும் சொல்லப்படுகிறது.

அதனால்தான் அவசர அவசரமாக பணியினை விரைந்து முடிப்பதற்காக வெளி மாநில தொழிலாளர்களை ஈடுபடுத்தி மக்களுக்கு பல்வேறு சங்கடங்களை உருவாக்குவதை கைகட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது மாநகராட்சி நிர்வாகம். தினமும் இந்த குறைபாடுள்ள பணிகளினால் பல வாகனங்கள் விபத்துக்குள்ளாகி மக்கள் பெரும் துயரத்தை அனுபவித்து வருவதை கேட்பதற்கு நாதியில்லை. தீர்வுக்கு யாரும் தயாராக இல்லை.

ஊழலும், லஞ்சமும் இன்றி இந்த நிர்வாகத்தில் எந்த பணியினையும் முழுமையாக நிறைவாக செயல்படுத்த முடியாது என்பதற்கு மழைநீர் வடிகால்வாய் பணி ஒன்றே சாட்சி. இதே நிலைதான் வேலூர், கோவை போன்ற அனைத்து மாநகராட்சிகளிலும் உள்ளது. காசு பணம் துட்டு மணி மணி என்றே பாடலே தமிழகத்தின் அதிகாரபூர்வ பாடலாக மாறிவிட்டது போல், குரங்கு கையில் கிடைத்த சந்தன மாலையாய் சென்னை சிதறிக் கொண்டிருக்கிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x