Published : 17 Sep 2022 12:57 PM
Last Updated : 17 Sep 2022 12:57 PM
சென்னை: தென்காசி மாவட்டத்தில் ஊர் கட்டுப்பாடு எனச் சொல்லி பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுக்காமல் திருப்பி அனுப்பிய கடைக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ளது பாஞ்சாங்குளம் கிராமம். பெரும்புத்தூர் ஊராட்சிக்கு உள்பட்ட இங்கு அரசுப் பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளிக்கூடத்திற்கு வரும் வழியில் மிட்டாய் கடை ஒன்று உள்ளது. இந்தக் கடையில் குழந்தைகள் மிட்டாய் வாங்கிச் சாப்பிடுவது வழக்கம்.
இந்நிலையில், கடைக்கு வந்த குழந்தைகளிடம் கடைக்காரர் , “இனிமேல் நீங்கள் யாரும் இங்கு வந்து தின்பண்டம் வாங்க வேண்டாம். ஸ்கூலுக்குப் போங்க. தின்பண்டம் உள்ளுர் கடையில் வாங்கக் கூடாது. நீங்கள் போங்க. இதை உங்கள் வீட்டிலும் போய் சொல்லுங்கள். தின்பண்டம் கொடுக்க மாட்டுறாங்க எனச் சொல்லுங்க. இனி கொடுக்க மாட்டாங்கடா. ஊரில் கட்டுப்பாடு வந்திருக்கு” என்று சொல்கிறார்.
உடனே, அதில் ஒரு குழந்தை என்னக் கட்டுப்பாடு என்று கேட்கிறார். உடனே, ‘கட்டுப்பாடுன்னா... ஊர்ல ஒரு கூட்டம் போட்டு பேசிருக்காங்க. உங்கத் தெருவுல யாருக்கும் பொருள்கள் கொடுக்கக் கூடாதுன்னு” என்று சொல்வி அந்தக் குழந்தைகளைத் திருப்பி அனுப்புகிறார்.
இதை அந்தக் கடைக்காரரே வீடியோவும் எடுத்துள்ளார். இந்த வீடியோவை அந்தக் கடைக்காரர் தன் சுய சாதியினர் இருக்கும் வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்துள்ளார். இதன் பிறகு பல வாட்ஸ்அப் குழுக்கள் இந்த வீடியோ வைரல் ஆனது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய மாவட்ட நிர்வாகம், ராமசந்திரமூர்த்தி என்பவரை கைது செய்தனர். மேலும், அந்தக் கடைக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT