Published : 17 Sep 2022 11:02 AM
Last Updated : 17 Sep 2022 11:02 AM
சென்னை: தமிழகத்தில் குழந்தைகள் மத்தியில் பரவி வரும் காய்ச்சலைக் கட்டுப்படுத்த 9-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் எனப்படும் H1N1 சளிக்காய்ச்சல் உள்ளிட்ட பலவகையான காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகின்றன. நடப்பாண்டில் இந்த வகை காய்ச்சல்கள் குழந்தைகளையே அதிக அளவில் தாக்குவது பெரும் கவலையையும், அச்சத்தையும் அளிக்கிறது.
இன்னொருபுறம் டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. எந்தெந்த பகுதிகளில் காய்ச்சல் அதிகமாக பரவுகிறது என்பதைக் கண்டறிவதற்கு சோதனையோ, நோய்த்தடுப்பு நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படவில்லை. இது காய்ச்சல் கட்டுக்கடங்காமல் பரவ வகை செய்து விடும்.
தமிழ்நாட்டில் எந்தெந்த பகுதிகளில் என்னென்ன வகையான காய்ச்சல்கள் பரவுகின்றன? நோய் தாக்கினால் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அனைத்து கிராமங்களிலும் மருத்துவ முகாம்களை தமிழக அரசு நடத்த வேண்டும்.
குழந்தைகள் ஒன்று கூடி விளையாடும் பள்ளிகள் வாயிலாகத் தான் காய்ச்சல் அதிக அளவில் பரவுவதாகத் தோன்றுகிறது. குழந்தைகளைக் காக்கவும், நோய்ப்பரவலை கட்டுப்படுத்தவும், நிலைமை சீரடையும் வரை 9-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT