Published : 26 Nov 2016 01:49 PM
Last Updated : 26 Nov 2016 01:49 PM

அரவக்குறிச்சி, தஞ்சாவூரை விட கூடுதல் வாக்கு வித்தியாசம்: திருப்பரங்குன்றம் வெற்றியால் செல்வாக்கை தக்கவைத்த ஓபிஎஸ்

திருப்பரங்குன்றம் இடைத்தேர்லில் அரவக்குறிச்சி, தஞ்சாவூரை காட்டிலும் கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றிப் பெற்றுள்ளதால் இந்த தொகுதி தேர்தல் பொறுப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், கட்சியில் தனது செல்வாக்கை தக்க வைத்துள்ளார்.

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளுக்கு கடந்த 19-ஆம் தேர்தல் நடந்தது. முதல் முறையாக, அதிமுகவில் முதலமைச்சர் ஜெயலலிதாவும், திமுகவில் அக்கட்சித் தலைவர் கருணாநிதியும் இந்த தேர்தல்களில் பிரச்சாரம் செய்ய வரவில்லை.

திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக பொறுப்பாளராக அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நியமிக்கப்பட்டார். இந்த தொகுதியில் இவரது தலைமையின் கீழ் 10 அமைச்சர்கள் மற்றும் தென் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தேர்தலில் வெற்றியைத் தாண்டி ஒ.பன்னீர்செல்வத்திற்கு அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல் பொறுப்பாளர்களை விட கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவை வெற்றி பெற வைப்பது முக்கிய சவாலாக இருந்தது.

இந்நிலையில் இந்த தேர்தலில் அரவக்குறிச்சியில் 23, 661 வாக்குகள் வித்தியாசத்திலும், தஞ்சையில் 26,874 வாக்குகள் வித்தியாசத்திலும் மட்டுமே அதிமுக வெற்றி பெற முடிந்தது.

திருப்பரங்குன்றம் தொகுதியில் மற்ற இரண்டு தொகுதிகளைக் காட்டிலும் அதிமுக, திமுகவைவிட 42,670 வாக்குகள் கூடுதலாக வாக்குகள் பெற்று சிறப்பான வெற்றி பெற்றது. இந்த தேர்தல் வெற்றி மூலம், ஓ.பன்னீர் செல்வம், கட்சியில் தன்னுடைய செல்வாக்கை மீண்டும் நிருபித்துள்ளார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக 78 ‘பூத்’களில் கூடுதல் வாக்குகள் பெற்றிருந்தது. ஆனால், இந்த தேர்தல்களில் அக்கட்சி 23 ‘பூத்’களில் மட்டுமே முன்னிலை பெற முடிந்தது. இதில் அமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் பொறுப்பாளராக இருந்த நிலையூர் 15 ‘பூத்’களில் மட்டும் அவர் அதிமுகவுக்கு திமுகவை விட கூடுதலாக 4 ஆயிரம் வாக்குகள் பெற்றுக் கொடுத்துள்ளார். இந்த ‘பூத்’களில் பதிவான வாக்குப்பதிவில் சராசரியாக அதிமுகவுக்கு 65 சதவீதம் வாக்குகள் விழுந்துள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த திருப்பரங்குன்றம் தொகுதியிலே ‘பூத்’ பொறுப்பாளர்கள் வகையிலும் ஓ.பன்னீர் செல்வம் கூடுதல் வாக்குகள் பெற்றுக் கொடுத்துள்ளார். இது அவருக்கு கட்சியில் கூடுதல் சிறப்பை பெற்றுக் கொடுத்துள்ளது.

இவருக்கு அடுத்து மாநகராட்சி வார்டுகள் 61, 62 மற்றும் சோளம்கூரணி, விராதனூர், கொசுவம்குன்று ஆகிய இடங்களில் 35 ‘பூத்’களில் பொறுப்பாளராக இருந்த முன்னாள் மேயரும், புறநகர் மாவட்டச் செயலாளரான ராஜன் செல்லப்பா, திமுகவை விட இந்த எல்லா ‘பூத்’களிலும் கூடுதல் வாக்குகள் பெற்றுக் கொடுத்துள்ளார். ஒட்டுமொத்தமாக இந்த ‘பூத்’களில் திமுகவை விட 6 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்றுக் கொடுத்து தொகுதி பொறுப்பாளர்கள் அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.

அமைச்சர் செல்லூர் ராஜூ 26 ‘பூத்’களில் பொறுப்பாளராக இருந்துள்ளார். இவர் பணியாற்றி இந்த ‘பூத்’களில் ஒரு பூத் திமுக கூடுதல் வாக்குகள் பெற்றது. ‘பூத்’களில் அதிக வாக்குகள் பெற்றுக் கொடுத்த நிர்வாகிகளுக்கு விரைவில் ஓ.பன்னீர் செல்வம் தன்னுடைய சொந்த செலவில் மோதிரம் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே மதுரை மாவட்டத்தை சேர்ந்த இரண்டு பேர் அமைச்சராக இருக்கும்நிலையில் திருப்பரங்குன்றம் தேர்தல் வெற்றியால், இந்த தொகுதிக்குட்பட்ட புறநகர் மாவட்டச் செயலாளராக இருக்கும் ராஜன்செல்லப்பா, அமைச்சர் பதவியை பெற பல்வேறு விதங்களில் காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x