Published : 16 Sep 2022 05:03 PM
Last Updated : 16 Sep 2022 05:03 PM
சென்னை: வேலைக்காக வெளிநாடு செல்பவர்கள் அயலக தமிழர்களுக்கான துறையில் பதிவு செய்ய வேண்டும் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் லட்சுமண்குடி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமரன். கடந்த 3-ம் தேதி குவைத் சென்ற இவர், 9-ம் தேதி மரணமடைந்துவிட்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முத்துக்குமரன் உடலை மீட்டு இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது மனைவி வித்யா கோரிக்கை வைத்திருந்தார்.
இதன்படி முத்துக்குமரன் உடல் இன்று தமிழகம் வந்தது. விமானம் மூலம் திருச்சி வந்த அவரது உடலுக்கு விமான நிலையத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, செஞ்சி மஸ்தான் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறுகையில், "வெளிநாட்டில் வேலைக்கு சென்று உயிரிழப்பவர்கள் தொடர்பாக துறை ரீதியாக நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். வேலை நிமித்தமாக சென்று முத்துக்குமரன் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது. அயலக தமிழர்களுக்கான துறை இருக்கிறது. வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் பதிவு செய்துவிட்டு செல்ல வேண்டும். அதற்காகத்தான் அந்தத் துறை உள்ளது. இதைப் பற்றி விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். வெளிநாட்டிற்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்ப வேண்டும் என்று கடந்த ஆண்டு 315 பேரும், இந்த ஆண்டு 311 பேரும் கோரிக்கை வைத்திருந்தனர். அவர்களை நாங்கள் அழைத்து வந்துள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT