Published : 16 Sep 2022 04:08 PM
Last Updated : 16 Sep 2022 04:08 PM

நால்வகைத் தூண்களும் விமர்சனத்திற்கு உட்பட்டுத்தானே ஆகவேண்டும்: சீமான் கருத்து

சீமான் | கோப்புப்படம்

சென்னை: "நால்வகைத் தூண்களான சட்டமன்றம், நிர்வாகம், நீதித்துறை, ஊடகங்கள் ஆகியவையும் விமர்சனத்திற்கு உட்பட்டுத்தானே ஆக வேண்டும். அவற்றை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாகக் கட்டமைப்பது எந்த வகையில் நியாயம்?" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "நீதித் துறை குறித்து விமர்சித்ததற்காக, யூடியூபர் சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு மாத காலம் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரின் கருத்துகளில் பலவற்றில் முரண்பட்டாலும், அவரின் கருத்துரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றே கருதுகிறேன். ‘நீதிமன்றங்கள், மக்களுக்கானதாக இருக்க வேண்டும்’ என்கிற அவரது வாதம் ஏற்கப்படவேண்டிய ஒன்றுதான். மக்களின் கடைசி நம்பிக்கையாக இருக்கிற நீதிமன்றங்கள் எந்தத் தவறும் இழைத்துவிடக்கூடாது என்கிற நோக்கம் மிகச் சரியானது.

அண்ணல் அம்பேத்கர் வகுத்த அரசியலமைப்புச்சட்டம், தனிநபருக்கான கருத்துரிமையையும், நீதிமன்றத்திற்கான பாதுகாப்பையும் சமமாக உறுதி செய்கிற நிலையில், தனிநபர் ஒருவரின் கருத்தால் நீதித்துறை முற்றாகக் களங்கப்படுகிறதென்பது ஏற்கக்கூடியதாக இல்லை. ஓர் எளிய மகன் அதிகார வர்க்கத்தை நோக்கிக் கேள்வியெழுப்புவதும், ஆட்சியாளர்களை விமர்சனத்துக்கு உட்படுத்துவதுமான கருத்துரிமையை உறுதிசெய்வதுதான் மக்களாட்சித் தத்துவத்தின் மகத்துவமாகும்.

உலகப் பொதுமறை தந்த தமிழ் மறையோன் வள்ளுவப் பெருமகனார் தனது குறட்பாவில், ‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்’ எனக் கூறி, எதிர்நின்று எவருமே கேள்வி கேட்க முடியாத பெரும் எதேச்சதிகாரப் போக்கால் கட்டமைக்கப்பட்ட முடியாட்சியிலேயே ஆளும் அரசனின் குறைகளையும், குற்றங்களையும் சுட்டிக்காட்ட வேண்டும்; இல்லாவிட்டால், அந்த ஆட்சியதிகாரம் வீழுமென்கிறார்.

மக்களால் தேர்வுசெய்யப்படாத மன்னராட்சியே விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டு, அதன் குற்றம், குறைகள் யாவும் அலசித் தீர்க்கப்பட வேண்டுமென்றால், மக்களாட்சியால் நிர்மாணிக்கப்பட்ட அரசாங்கக் கட்டமைப்பும், நால்வகைத் தூண்களான சட்டமன்றம், நிர்வாகம், நீதித்துறை, ஊடகங்கள் ஆகியவையும் விமர்சனத்திற்கு உட்பட்டுத்தானே ஆக வேண்டும். அவற்றை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாகக் கட்டமைப்பது எந்தவகையில் நியாயம்? அந்த அடிப்படையில், ஜனநாயகத்தின் மிக முக்கிய அங்கங்களுள் ஒன்றான நீதித்துறையின் மீது எழுப்பப்பட்டக் கேள்விகளுக்காக சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறைத்தண்டனை என்பது அதிகப்படியானது என்றே எண்ணுகிறேன்.

சவுக்கு சங்கரின் கருத்துகளில் தவறு இருப்பதாக நீதிமன்றம் கருதினால், அது தனக்குண்டான கட்டற்ற அதிகாரத்தை உணர்ந்து, கண்டனத்தோடும், எச்சரிக்கை செய்தும்கூட இவ்வழக்கைக் கையாண்டிருக்கலாம். கடந்த காலங்களில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி , ‘தகுதியின் அடிப்படையில் நீதிபதிகள் வரவில்லை; அடுத்தவர் காலை பிடித்தே வந்திருக்கிறார்கள்’ என மிக இழிவாகவும், பல அரசியல் உள்காரணங்களோடும் கருத்துதிர்த்தபோது அவமதிப்புக்குள்ளாகாத நீதிபதிகளும், நீதித்துறையும், சவுக்கு சங்கர் கூறிய கருத்துகளினால் எப்படி மாண்பிழந்து போவார்கள் என்பதை அறிய முடியவில்லை.

ஜனநாயகத்தில், இந்த இடத்தில் விமர்சனத்திற்கு உட்பட்டவர், இந்த இடத்தில் இருப்பவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்று எந்த வரையறையும் கிடையாது. இந்த நாட்டில் நீதிமன்றங்கள் இதுவரை பிழையே இழைத்ததில்லை என்று யாராவது கூற முடியுமா? நீதிமன்றத்திற்கு நீதிமன்றம் நீதி மாறுபடும்போது, ஒரு நீதிபதியால் வழங்கப்படும் நீதி, மற்றொரு நீதிபதியால் மாற்றப்படும்போது, நீதித்துறை எப்படி விமர்சனத்திற்கு ஆளாகாமல் இருக்க முடியும்?

இன்றைய நீதிபதிகள், வழக்கறிஞர்களாக இருந்த கடந்த காலங்களில், ‘நீதிபதிகள் ஒன்றும் கடவுள்கள் அல்லர்’ என்று விமர்சித்த வரலாற்றை மறுக்க முடியுமா? நீதி தவறினால் உடனே உயிரை மாய்த்துக்கொள்ள இன்றைக்கு நீதித்துறையில் உள்ளவர்கள் அனைவரும் நீதி வழுவா பாண்டிய நெடுஞ்செழியர்களா? அல்லது மகன் மீது தேரேற்றி மாட்டுக்கு நீதி சொன்ன மனுநீதிச்சோழர்களா? என்கின்ற கேள்வி மக்கள் மனதில் எழுகிறது.

ஆகவே, சவுக்கு சங்கரின் அடிப்படையான நோக்கத்தையும், தனி நபர் ஜனநாயக உரிமையைக் கருத்தில் கொண்டும் அவருக்கு வழங்கப்பட்ட ஆறு மாத சிறைத்தண்டனையை, உயர் நீதிமன்றம் மறுபரிசீலனை செய்து அவரை விடுவிக்க வேண்டுமெனக் கோருகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, சென்னையை சேர்ந்த யூடியூபர் சவுக்கு சங்கர். இவர் ட்விட்டரில், ‘நீதித் துறை ஊழல் கறை படிந்திருக்கிறது’ என கருத்து பதிவு செய்தார். இதற்காக அவர் மீது உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில், சவுக்கு சங்கருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து சவுக்கு சங்கரை கைது செய்த போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x