Published : 16 Sep 2022 01:11 PM
Last Updated : 16 Sep 2022 01:11 PM
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியை முறையாக செய்யாமல் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சைதாப்பேட்டை பணிமனையில் நடத்துனராக பணியாற்றி வந்த பாலச்சந்தர் என்பவர் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டு, பணிநீக்கம் செய்யப்பட்டர். பணி நீக்கத்துக்கு ஒப்புதல் கோரி, தொழிலாளர் நலத்துறை துணை ஆணையரை, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அணுகியபோது, விசாரணை குறித்து தகவல்கள் முறையாக இணைக்கப்படாததால் பணி நீக்கத்துக்கு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார்.
இதை எதிர்த்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த விவாகரத்தை மீண்டும் விசாரிக்குமாறு தொழிலாளர் நலத்துறை துணை ஆணையருக்கு உத்தரவிட்டார்.
மேலும், போக்குவரத்து கழகங்களில் தவறிழைக்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள், ஊழல் உள்ளிட்ட சில காரணங்களால் நடவடிக்கை எடுப்பது இல்லை. இது போன்ற விவகாரங்களில், அதிகாரிகள், உரிய முறையில் பணிகளை செய்யாததால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது.
தங்களது பணிகளை முறையாக மேற்கொள்ளாமல் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும் போக்குவரத்து துறை செயலாளர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT