Published : 16 Sep 2022 11:02 AM
Last Updated : 16 Sep 2022 11:02 AM
மாணவர்கள் அரசியலில் ஈடுபடாமல் இருந்தால் திருடர்கள் அரசியலுக்கு வந்து விடுவார்கள் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் 'நிட்பெஸ்ட் 2023' என்னும் கலாச்சார திருவிழா நேற்று என்ஐடி வளாகத்தில் நடைபெற்றது.
என்ஐடி இயக்குநர் ஜி.அகிலா தலைமை வகித்தார். மாணவர் நலத் துறை தலைவர் என்.குமரேசன் முன்னிலை வகித்தார்.
இதில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடம் பேசியது: பள்ளிப் படிப்பை பாதியில் விட்ட எனக்கு பொறியாளர் தினத்தில் என்ஐடி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது பெருமை அளிக்கிறது.
எந்த துறையிலும் சிறப்பாக செயல்படுவதற்கு பயிற்சி தேவை. எதிர்காலத்தை நிர்ணயிக்கும் நீங்கள், பொறியியல் துறையால் அழிவை ஏற்படுத்தாமல், அதை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் வழியை மட்டுமே எப்போதும் தேர்வு செய்ய வேண்டும்.
அனைவரும் புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். எட்வர்டு எழுதிய லேட்டரல் திங்கிங் எனும் புத்தகம் என்னுள் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. அப் புத்தகத்தை எந்த வயதினரும் எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம்.
அரசியல் எனக்கு தொழில் கிடையாது. அதை ஒரு கடமையாகவே கருதுகிறேன். வாக்களிப்பது ஜனநாயகத்துக்கு நீங்கள் தரும் முதல் முத்தத்தை போன்றது. வாக்களிக்க தயங்குபவர்களுக்கு ஜனநாயகம் குறித்து பேசுவதற்கு தகுதி கிடையாது.
மாணவர்கள் அரசியலில் ஈடுபடாமல், தேர்தலில் வாக்களிக்காமல் இருந்தால், திருடர்கள் அரசியலுக்கு வந்து விடுவார்கள். எனவே அனைவரும் கண்டிப்பாக ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்றார்.
அதைத்தொடர்ந்து, என்ஐடி மாணவர்களின் இசை, நடனம் உள்ளிட்ட கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் என்ஐடி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT