Published : 16 Sep 2022 04:25 AM
Last Updated : 16 Sep 2022 04:25 AM
மதுரை: அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 1.14 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது, குழந்தைகளின் பசியைப் போக்க எந்த தியாகத்தையும் செய்யத் தயார் என்று அவர் தெரிவித்தார்.
அரசுப் பள்ளி மாணவர்களின் பசி, ஊட்டச்சத்து குறைபாட்டைபோக்கி, கல்வியை ஊக்குவிக்கவும், இடைநிற்றலை தவிர்க்கவும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி, அண்ணா பிறந்த நாளான நேற்று, மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், காலை உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர், குழந்தைகளுடன் அமர்ந்து சாப்பிட்டார். குழந்தைகளுக்கு கேசரி, ரவா கிச்சடி, சேமியா உப்புமா வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் ‘தமிழக அரசின் நூற்றாண்டு கண்ட கல்விப் புரட்சி’ என்னும் நூலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட, முதல் பிரதியை கோவையைச் சேர்ந்த ஒரு ரூபாய் இட்லி பாட்டி கமலாத்தாள் பெற்றுக்கொண்டார்.
பின்னர் முதல்வர் பேசியதாவது:
பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் என்பது, அமெரிக்காவில் பல மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. ஐரோப்பிய நாடுகளிலும், குறிப்பாக 3 ஆண்டுகளுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டிலும் காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
பள்ளிகளில் காலை உணவு வழங்குவதால் அந்த நாட்டு மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுவதாகவும், மாணவர் வருகை அதிகரிப்பதாகவும் பல ஆய்வு முடிவுகள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.
சென்னையில் ஒருமுறை ஒரு பள்ளிக்கு சென்றபோது, அங்கே இருந்த குழந்தைகளிடம், ‘ஏன் சோர்வாக இருக்கிறீர்கள், சாப்பிடவில்லையா’ என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், ‘காலையில் எப்போதும் நாங்கள் சாப்பிடுவதில்லை. அப்படியே பள்ளிக்கு வந்துவிடுவோம்’ என்று சொன்னதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. உடனே அதிகாரிகளுடன் ஆலோசித்தபோது, நிறைய குழந்தைகள் காலையில் சாப்பிடாமல்தான் பள்ளிக்கு வருகிறார்கள் என்றனர்.
குழந்தைகளை பட்டினியாக அமரவைத்து பாடம் சொல்லித் தரக்கூடாது என்று நினைத்துதான் காலை உணவு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி இருக்கிறோம். இன்று எத்தகைய நிதிச் சுமை இருந்தாலும், பசி சுமையைப் போக்க நாம் முடிவெடுத்து இப்பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.
இத்திட்டத்தின்படி தினமும் முதல்கட்டமாக 1 லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட உள்ளது. 1,545 பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகள் பயனடைவர். ஒரு குழந்தைக்கு நாள் ஒன்றுக்கு 12 ரூபாய் 75 காசு செலவு செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தை படிப்படியாக விரிவுபடுத்தி, முழுமையாக நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
‘பசிப்பிணியும், பகையும் நீங்கி, வசியும் வளனும் சுரக்க வாழ்’என்கிறது மணிமேகலை காப்பியம். அத்தகைய மாநிலமாக தமிழகம் அமைய எந்நாளும் உழைப்போம். குழந்தைகளின் பசியைப் போக்கிட எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பெரியகருப்பன், பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், பெ.கீதா ஜீவன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி,மதுரை மேயர் இந்திராணி, ஆட்சியர் அனீஸ் சேகர், சு.வெங்கடேசன் எம்.பி., மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT