Published : 16 Sep 2022 07:39 AM
Last Updated : 16 Sep 2022 07:39 AM
சென்னை: பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர்களைச் சேர்க்க மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: தமிழகத்தில் கல்வியறிவின்மை, சுகாதாரச் சவால்கள் மற்றும் வேலையின்மை காரணமாகப் போராடும் நரிக்குறவர், குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை வரவேற்கிறேன்.
பாமக தலைவர் அன்புமணி: நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்காரர்களை பழங்குடியினத்தில் சேர்ப்பதற்கான சட்ட முன்வரைவுக்கு கடந்த 2016 மே 25-ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால், அந்த சட்ட முன்வரைவு சட்டமாக்கப்படவில்லை. தற்போது மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ள முடிவுக்கு விரைவாக செயல்வடிவம் தர வேண்டும்.
தமிழகத்தில் வாழும் மலைவேடர்கள், குரும்பா, குரும்பர், கொண்டாரெட்டிகள் உள்ளிட்டோரும் தங்களை பழங்குடியினத்தில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அவர்களது கோரிக்கைகளையும் ஆராய்ந்து நிறைவேற்ற, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மநீம தலைவர் கமலஹாசன்: நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட சமூகத்தினரைச் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது வரவேற்கத்தக்கது. அதேசமயம், ஏற்கெனவே எஸ்.டி. பட்டியலில் உள்ள சமூகத்தினர் பாதிக்காத வகையில் இந்த அறிவிப்பை செயல்படுத்த வேண்டும்.
மேலும், தாமதமின்றி சாதிச் சான்றிதழ் வழங்கப்படுவதையும், நலத்திட்ட உதவிகள் கோரும் விண்ணப்பங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதையும், உயர்கல்வி, வேலைவாய்ப்புகளில் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படுவதையும் மத்திய, மாநில அரசுகள் உறுதிசெய்ய வேண்டும்.
திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி: சமூகத்தில் பல்வேறு அவலங்களை நாள்தோறும் சந்திக்கும் நரிக்குறவர் சமூக மக்களையும், குருவிக்காரர் சமூகத்தவரையும் பழங்குடி சமூகப் பிரிவின்கீழ் சேர்க்க வேண்டுமென்று பிரதமரிடம் நமது தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இது ஏற்கப்பட்டு, ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனால், அவர்களின் முன்னேற்றம், வளர்ச்சி பெரிதும் சிறப்பாக அமையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணமான தமிழக முதல்வரையும், மத்திய அமைச்சரவையையும் பாராட்டி நன்றி கூறுகிறோம்.
சமக தலைவர் சரத்குமார்: நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட 4 சமூகங்களைச் சேர்ந்தவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. கல்வி, பொருளாதார, வேலைவாய்ப்பு வழங்குவதில் அனைத்து தரப்பு மக்களிடமும் சமத்துவமும், சமூக நீதியும் நிலைபெறட்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT