Published : 16 Sep 2022 06:30 AM
Last Updated : 16 Sep 2022 06:30 AM

ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த திமுக அரசு துணை நிற்கும்: நரிக்குறவர் இன மக்களிடம் ஸ்டாலின் உறுதி

சென்னை: பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டதற்காக நன்றி தெரிவிக்க வந்த நரிக்குறவர் பிரதிநிதிகளிடம், ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை, சிறுபான்மை மக்களின் உரிமைகளை வென்றெடுக்கவும், வாழ்வாதாரத்தை உயர்த்தவும் திமுக அரசு துணை நிற்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

‘பழங்குடியினர்’ பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற நரிக்குறவர் இன மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்காக திமுகவும், திமுக அரசும் எடுத்த தொடர் முயற்சிகளின் விளைவாக, மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அதற்கு நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும், இதற்கு முன்பே கடந்த ஆண்டு நவம்பர் 4-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரிக்குச் சென்று, நரிக்குறவர் மற்றும் பிற விளிம்புநிலை மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கான ஆணைகளையும் வழங்கினேன்.

தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் நரிக்குறவர், பழங்குடியினர் மற்றும் இதர விளிம்புநிலை மக்கள் வசிக்கும் கிராமங்களில் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு, அங்கு வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் அரசின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்டறிந்து, தேவைகள் மதிப்பீட்டுப் பட்டியல் தயார் செய்யவும் தலைமைச் செயலர் வாயிலாக அறிவுறுத்தப்பட்டது.

அதனடிப்படையில் 5,875 குடியிருப்புப் பகுதிகளில், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் தேவைகள் மதிப்பிடப்பட்டு, புதிய கான்கிரீட் வீடுகள், குடிநீர் இணைப்புகள், மின்சார இணைப்புகள், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், குடும்ப அட்டைகள், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள், சாதிச் சான்றிதழ்கள், நலவாரிய அட்டைகள், பல்வேறு உதவித்தொகைகள், சாலை வசதி, திறன் பயிற்சி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.

நரிக்குறவர் பழங்குடியினராக அறிவிக்கப்படுவார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ள இந்த வேளையில், நரிக்குறவர் இன மக்களின் சமூக நீதிக்காக அனைத்து நிலைகளிலும் அரசு மேற்கொண்ட தொடர் முயற்சிகளுக்காகவும், மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்காகவும் நரிக்குறவர் இன மக்களின் பிரதிநிதிகள் விருதுநகரில் இன்று என்னை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

சமத்துவப் பெரியார், மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் வழியில் நடக்கும் திமுக அரசு, ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை, சிறுபான்மை சமூகங்களுக்கான பிரதிநிதியாக இருந்து, அவர்களின் உரிமைகளை வென்றெடுக்கவும், வாழ்வாதாரத்தை உயர்த்தவும் என்றும் துணை நிற்கும் என்று அவர்களிடம் உறுதியளித்தேன்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x