Published : 16 Sep 2022 07:06 AM
Last Updated : 16 Sep 2022 07:06 AM
விருதுநகர்: நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
திமுக முப்பெரும் விழா விருதுநகரில் நேற்று மாலை நடந்தது. அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வரவேற்றார். அமைச்சர் துரைமுருகன் தலைமை வகித்தார்.
அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, க.பொன்முடி, திமுக துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர்களில் சிறப்பாகக் கட்சிப் பணியாற்றிய தலா ஒருவர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பணப்பரிசு மற்றும் சான்றிதழை ஸ்டாலின் வழங்கினார்.
அண்ணா விருது கோயம்புத்தூர் இரா.மோகனுக்கும், கருணாநிதி விருது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி.க்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது புதுச்சேரி சி.பி.திருநாவுக்கரசுக்கும், பேராசிரியர் விருது குன்னூர் சீனிவாசனுக்கும், பெரியார் விருது சம்பூர்ணம் சாமிநாதனுக்கும் முதல்வர் வழங்கினார்.
பின்னர் 1968 முதல் 2018 வரை முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய 4,041 கடிதங்கள், 21,510 பக்கங்கள் அடங்கிய புத்தகமாக சீதை பதிப்பக உரிமையாளர் கவுரா ராஜசேகர் தொகுத்துள்ளார்.
இந்நூலை முதல்வர் வெளியிட, அமைச்சர் துரைமுருகன் பெற்றுக் கொண்டார். மேலும் திராவிட மாடல் கொள்கை, கோட்பாடுகள் அடங்கிய நூலை அமைச்சர் துரைமுருகன் வெளியிட டிஆர்.பாலு பெற்றுக்கெண்டார். விழாவில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
செப்.15 அண்ணா பிறந்த நாள் திருநாள். நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ளும் நாள். இந்த ஆட்சிக்கு திராவிட மாடல் எனப் பெயர் சூட்டினேன். திராவிடம் என்ற சொல் இந்தியாவின் கவனத்தை ஈர்த்தது. திராவிடம் என்பது அரசியல் கொள்கையின் பெயராக இருக்கிறது.
திராவிடம் என்றால் எல்லாருக்கும் எல்லாம் என்பதுதான். உயர்ந்தவர் தாழ்ந்தவர் எனப் பிரிப்பது ஆரிய மாடல், இதற்கு நேர் எதிரானது திராவிட மாடல்.
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் பெரும்பாலான வளர்ச்சிக் குறியீடுகளில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது. தமிழகத்தில் 253 பேருக்கு ஒரு மருத்துவர் என சுகாதாரத்தில் முன்னணியில் இருக்கிறோம். பட்டினிச் சாவு இல்லாத மாநிலமாக இருக்கிறது. நூறு சிறந்த பல்கலைக்கழகங்களில் 21 தமிழகத்தில் உள்ளன.
மத்திய அரசின் இந்தி திணிப்பை ஏற்க முடியாது. மத்திய அரசின் ஜிஎஸ்டி மூலம் நிதி உரிமை பறிக்கப்பட்டுவிட்டது. நீட் மூலம் கல்வி உரிமை பறிக்கப்பட்டுவிட்டது. ஆளுநர் மூலம் இரட்டை ஆட்சி நடத்தபார்க்கிறார்கள். இந்தியாவின் 3-வது மிகப் பெரும் கட்சியாக இருப்பது நமக்கு பெருமை.
அதை தக்க வைக்க வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40 என்ற வெற்றியை அடைந்தாக வேண்டும். அதற்கு முப்பெரும் விழா தொடக்கமாக அமையட்டும். இவ்வாறு அவர் பேசினார். அமைச்சர் தங்கம் தென்னரசு நன்றி கூறினார். இவ்விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து வந்த ஏராளமான திமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT