Published : 16 Sep 2022 06:18 AM
Last Updated : 16 Sep 2022 06:18 AM
சென்னை: கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து திமுக எம்எல்ஏ தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.
கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றியது தொடர்பான அரசியலமைப்பு சட்டத்தின் 42-வது சட்டதிருத்தத்தை எதிர்த்து ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏவான டாக்டர் எழிலனின் அறம் செய்ய விரும்பு தொண்டு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
அதில் கடந்த 1975 முதல் 1977 வரை நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது மாநில அரசுகளின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டன. அப்போது வனம், நிர்வாகம், கல்வி, எடை மற்றும் அளவிடல், விலங்குகள் மற்றும் பறவைகள் பாதுகாப்பு, நீதி நிர்வாகம் ஆகியவை மாநிலப் பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டன.
மேலும், மாநில அரசு பட்டியலில் இருந்த கல்வியை, பொதுப்பட்டியலுக்கு மாற்றி அரசியலமைப்பு சாசனத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுகூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது. கல்வி தொடர்பாக சட்டங்கள் இயற்றும் மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்பட்டு, மத்தியஅரசின் சட்டங்களுக்கு கட்டுப்பட்டவையாக இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் கல்விஅந்தந்த மாகாண அரசுகளின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. எனவே கல்வியை மீண்டும் மாநிலப்பட்டியலுக்கு கொண்டுவர உத்தரவு பிறப்பிக்க வேண்டும், என அதில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி எம்.துரைசாமி, நீதிபதி சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் கூடுதல் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில்,அரசியலமைப்பு சட்ட விவகாரம் தொடர்பான இந்த வழக்கை 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வுவிசாரிக்க உத்தரவிட வேண்டும், என கோரியிருந்தார். அதையேற்ற நீதிபதிகள், இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வி்ன் விசாரணைக்கு மாற்றினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT