Published : 02 Jul 2014 08:55 AM
Last Updated : 02 Jul 2014 08:55 AM

கச்சத் தீவு இலங்கைக்கு சொந்தமானது: தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க உரிமை இல்லை- சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்றும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீன் பிடிக்கும் உரிமை தமிழக மீனவர்களுக்கு இல்லை என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் மத்திய அரசு கூறியுள்ளது.

சென்னை பழைய பல்லாவரத்தைச் சேர்ந்த மீனவர்கள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் எல்.டி.ஏ.பீட்டர்ராயன், உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். ‘கச்சத் தீவு பகுதி உள்பட தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் யாவும் பாதுகாக்கப்பட வேண்டும். இலங்கை கடற்படையின் தாக்குதல்களில் இருந்து இந்திய மீனவர்களைப் பாதுகாக்க நிரந்தர ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்' என்று தனது மனுவில் பீட்டர் ராயன் கோரியுள்ளார். இந்த வழக்கில் மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

இந்திய இலங்கை இடையேயான கடல் எல்லை தொடர்பாக கடந்த 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்களின்படி கச்சத் தீவு, இலங்கைக்குச் சொந்தமானது. கச்சத்தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீன் பிடிக்கும் உரிமை இந்திய மீனவர்களுக்கு இல்லை.

கச்சத்தீவு பகுதியில் ஓய்வெடுப்பதற்கும் மீன்பிடி வலைகளை உலர்த்திக் கொள்வதற்கும் அந்தோணியார் கோயிலில் நடக்கும் திருவிழாவில் கலந்து கொள்வதற்கும் மட்டுமே இந்திய மீனவர்களுக்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளது. மாறாக, அந்தப் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமை எதுவும் இந்திய மீனவர்களுக்கு கிடையாது.

படைகளைப் பயன்படுத்தி இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்றும், அவ்வாறு தாக்குவதை நியாயப்படுத்த முடியாது என்றும் இலங்கை அரசிடம் இந்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதேநேரத்தில் எல்லை தாண்டுவதால் ஏற்படும் ஆபத்துகளை விளக்கி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைய வேண்டாம் என தமிழக அரசும், கடலோர காவல் படையும் தமிழக மீனவர்களிடம் வலியுறுத்தி வருகின்றன. இந்த நடவடிக்கைகளின் காரணமாக கடந்த 2011 ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு இந்திய மீனவர்கள் யாரும் கொல்லப்பட்டதாக தகவல் இல்லை.

இவ்வாறு மத்திய அரசின் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையை 2 வார காலத்துக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

இதே வழக்கில் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசும் பதில் மனு தாக்கல் செய்திருந்தது. கச்சத் தீவு பகுதியில் இந்திய மீனவர்களுக்கு மீன் பிடிக்கும் உரிமை இல்லை என்று அதில் கூறப்பட்டிருந்தது. அதே கருத்தைத்தான் பாஜக தலைமையிலான மத்திய அரசு சார்பில் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவிலும் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் கச்சத் தீவு விவகாரத்தில் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்ட நிலைப்பாட்டையே தற்போதைய பாஜக தலைமையிலான மத்திய அரசும் தொடர்கிறது என்பது தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x