Published : 15 Sep 2022 10:41 PM
Last Updated : 15 Sep 2022 10:41 PM

“நாற்பதும் நமதே... நாடும் நமதே” - திமுகவின் முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

விருதுநகர்: திமுகவின் முப்பெரும் விழா விருதுநகரில் இன்று நடந்தது. இதில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் திமுகவின் மூத்த நிர்வாகிகளுக்கு விருது வழங்கினார்.

கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், "இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுடனும் ஒப்பிட்டால் பெரும்பாலான வளர்ச்சிக் குறியீடுகளில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பொறுத்தவரை மகாராஷ்டிராவுக்கு அடுத்ததாக தமிழ்நாடு இருக்கிறது. உலக சுகாதார அமைப்பானது ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. ஆனால், தமிழ்நாட்டில் 253 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதத்தில் மருத்துவர்கள் இருக்கிறார்கள். இந்திய அளவிலான தனிநபர் வருவானத்தை விட, தமிழ்நாட்டில் தனிநபர் வருவாய் என்பது அதிகம்.

பட்டினிச் சாவுகள் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. இந்தியா முழுமைக்கும் உள்ள தலைசிறந்த 100 பல்கலைக் கழகங்களில் 21 தமிழ்நாட்டில் இருக்கிறது. இப்படி தமிழ்நாட்டின் சாதனைகளை நான் சொல்லிக் கொண்டே போக முடியும். இதுதான் திராவிட மாடல் வளர்ச்சி. ஆட்சி. தமிழகத்தை திராவிட மாடல் கொள்கைகளோடு வளப்படுத்தும் நமக்கு இந்தியா முழுமைக்குமான சில கடமைகள் இருக்கிறது. கூட்டாட்சியை, மாநில சுயாட்சியை, மதச்சார்பின்மையை, சமத்துவத்தை, சகோதரத்துவத்தை, சமதர்மத்தை, சமூகநீதியை இந்தியா முழுவதும் நிலைநாட்ட வேண்டும். வலுவான மாநிலங்கள்தான் கூட்டாட்சியின் அடிப்படை. நாம் மட்டுமே, வலிமையான, அதிகாரம் பொருந்திய, தன்னிறைவு பெற்ற மாநிலமாக இருந்தால் மட்டும் போதாது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் அப்படி ஆகவேண்டும். அதுதான் திமுகவின் அரசியல் கொள்கை.

நாம் வலிமையான, வளமான மாநிலமாக இருப்பதால்தான் மக்களுக்கு இந்தளவு நன்மைகள் செய்ய முடிகிறது. இந்த அதிகாரங்கள் பறிக்கப்படுமானால், தடுக்கப்படுமானால் இந்தளவு நன்மையைச் செய்ய முடியாது. ஒற்றைத் தன்மை கொண்டதாகவும், ஒற்றை மொழியான இந்தியை திணிப்பதையும் நாம் ஏற்க முடியாது. ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி வரி மூலமாக நிதி உரிமை பறிக்கப்பட்டுவிட்டது.

நீட், புதிய கல்விக் கொள்கை மூலம் இன்றைக்கு நம்முடைய உரிமை மறுக்கப்பட்டுவிட்டது. ஒன்றிய அரசின் பல்வேறு சட்டங்கள், மக்கள் விரோத சட்டங்களாக இருக்கின்றன. ஆளுநர்களின் மூலமாக இரட்டை ஆட்சி நடத்தப் பார்க்கிறார்கள். இவற்றைத் தடுக்க மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் நம் கூட்டணி வெல்ல வேண்டும். இந்தியாவில் மூன்றாவது கட்சியாக திமுக அமர்ந்திருப்பது நமக்குப் பெருமை. அதே பெருமையைத் தக்கவைக்க வேண்டுமானால் 40-க்கு 40 என்ற வெற்றியை நாம் அடைந்தாக வேண்டும்.“நாற்பதும் நமதே. நாடும் நமதே”. 40-க்கு 40 வெற்றி என்பதற்கு இந்த விழா தொடக்கமாக அமையட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x