Published : 15 Sep 2022 07:52 PM
Last Updated : 15 Sep 2022 07:52 PM
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் 2-வது கட்ட நீட்டிப்பு திட்டத்திற்கு சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டர் கோரியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டம் 54.1 கி.மீ தொலைவிற்கு விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை, சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை என இரண்டு வழித்தடங்களில் முழுமையாக செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில் 2-வது கட்ட மெட்ரோ பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. ரூ.69,180 கோடி செலவில், 118.9 கிலோ மீட்டர் நீளத்திற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் அனைத்தும் 2026-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்படி 3-வது வழித்தடம் மாதவரம் முதல் சிறுசேரி வரையில் 45.8 கி.மீ நீளத்திற்கு அடையாறு, மயிலாப்பூர், புரசைவாக்கம் வழியாகவும், 4-வது வழித்தடம் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26.1 கி.மீ நீளத்திற்கு தி.நகர், வடபழனி, போரூர் வழியாகவும், 5-வது வழித்தடம் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47.0 கி.மீ நீளத்திற்கு வில்லிவாக்கம், ராமாபுரம், மேடவாக்கம் வழியாகவும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் 2-வது கட்ட நீட்டிப்பு திட்டத்திற்கு சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டர் கோரியுள்ளது. இதன்படி 3-வது வழித்தடத்தில் கேளம்பாக்கத்தில் இருந்து மாம்பாக்கம், வண்டலூர் வழியாக, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரையிலும், சிறுசேரியில் இருந்து கிளாம்பாக்கம் வரையிலும், 4-வது வழித்தடத்தில் பூந்தமல்லி முதல் திருப்பெரும்புதூர் வரையிலும், 5-வது வழித்தடத்தில் திருமங்கலம் முதல் ஆவடி வரையிலும் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டர் கோரியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT