Published : 15 Sep 2022 12:05 PM
Last Updated : 15 Sep 2022 12:05 PM
சென்னை: முன்னாள் முதல்வர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளையொட்டி அண்ணா சாலையில் உள்ள அண்ணாவின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு அதிமுக சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழக முன்னாள் முதல்வரான பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது புகைப்படத்திற்கு அதிமுக சார்பில், அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில், அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், தளவாய் சுந்தரம், காமராஜ், ஓ.எஸ்.மணியன், சி.விஜயபாஸ்கர், கோகுலஇந்திரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்," தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், நிலச்சுவாந்தார்கள்தான் அரசியலில் கோலோச்சியிருந்த நிலைமை. ஆனால், பாமரன்கூட அரசியலுக்கு வந்து மக்களுக்கு தொண்டாற்ற முடியும் என்ற நிலையை உருவாக்கியவர் அறிஞர் அண்ணா.
அவர் ஒரு பன்முகத்தன்மைக் கொண்ட தலைவர். அண்ணாவின் சொற்பொழிவுகள் இனிமையான உணர்ச்சிப் பொங்கும் சொற்பொழிவுகள்தான். அண்ணா அரசியலில் நாகரிகத்தை என்றுமே கடைபிடித்தவர்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT