Published : 15 Sep 2022 11:06 AM
Last Updated : 15 Sep 2022 11:06 AM

பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள் | நீண்ட கால சமூக அநீதி சரி செய்யப்பட்டிருக்கிறது: அன்புமணி

அன்புமணி ராமதாஸ் | கோப்புப்படம்

சென்னை: "தமிழ்நாட்டைச் சேர்ந்த நரிக்குறவர்களை பழங்குடியினராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல போராட்டங்களை பாமக நடத்தியிருக்கிறது.பாமகவின் நீண்டகால கோரிக்கை இப்போது செயல்வடிவம் பெற்றிருப்பதில் மிக்க மகிழ்ச்சி. இதற்கு காரணமான பிரதமர் நரேந்திர மோடிக்கு பாமக நன்றி தெரிவித்துக் கொள்கிறது" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டைச் சேர்ந்த நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட 4 சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாய மக்களின் சமூக, கல்வி முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இமாலயப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹாட்டீ, சத்தீஸ்கரைச் சேர்ந்த பிரிஜியா, தமிழ்நாட்டைச் சேர்ந்த நரிக்குறவர்கள் ஆகிய மூன்று சமூகங்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை காரணமாக 4 சமூகங்களையும் சேர்ந்த பல லட்சம் மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமையும், சமூகநீதியும் கிடைக்கும்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த நரிக்குறவர்களை பழங்குடியினராக அறிவிக்க வேண்டும் என்று பாமக பல பத்தாண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. இக்கோரிக்கையை வலியுறுத்தி பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த 40 ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகிறார். கடந்த காலங்களில் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி பல போராட்டங்களை பாமக நடத்தியிருக்கிறது.பாமகவின் நீண்டகால கோரிக்கை இப்போது செயல்வடிவம் பெற்றிருப்பதில் மிக்க மகிழ்ச்சி. இதற்கு காரணமான பிரதமர் நரேந்திர மோடிக்கு பாமக நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

நரிக்குறவர்கள் எப்போதோ பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் மலைகளில் வாழவில்லை, சமவெளிகளில் வாழ்கின்றனர் என்ற ஒற்றை வாதத்தை மட்டும் வைத்துக் கொண்டு, அவர்களுக்கு பழங்குடியினர் தகுதி மறுக்கப்பட்டு வந்தது. நரிக்குறவர்கள் காடுகளிலும், மலைகளிலும் வாழ்ந்ததற்கும், நகரமயமாக்கல் காரணமாகத் தான் அவர்கள் சமவெளிப் பகுதிகளில் நாடோடிகளாக வாழத் தொடங்கினார்கள் என்பதற்கும் ஏராளமான சான்றுகள் உள்ளன. அந்த உண்மை இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டு, நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் நீண்ட கால சமூக அநீதி சரி செய்யப்பட்டிருக்கிறது.

நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்காரர்களை பழங்குடியினத்தில் சேர்ப்பதற்கான சட்ட முன்வரைவுக்கு கடந்த 25.05.2016 அன்றே மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால், நல்வாய்ப்புக்கேடாக அப்போது அந்த சட்ட முன்வரைவு சட்டமாக்கப்படவில்லை. இப்போது மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ள முடிவுக்கு விரைவாக செயல்வடிவம் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் வாழும் மலைவேடர்கள், தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிகமாக வாழும் குரும்பா, குரும்பர், திருவண்ணாமலை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் வாழும் கொண்டாரெட்டிகள் உள்ளிட்ட மேலும் பல சாதிகளும் தங்களை பழங்குடியினத்தில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது தான். எனவே, அந்த கோரிக்கைகளையும் ஆராய்ந்து நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x