Published : 24 Nov 2016 02:23 PM
Last Updated : 24 Nov 2016 02:23 PM
ரூபாய் நோட்டுகள் செல்லாதது தொடர்பான பிரச்சினையால் மக்கள் அலைக்கழிக்கப்படுவதைக் கண்டித்து புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெற்றது.
இப்போராட்டத்தில் முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டு பேசும்போது, "கருப்பு பணத்தை வெளிக்கொண்டு வர முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் நடவடிக்கையால் ரூ. 65 ஆயிரம் கோடி மீட்கப்பட்டது.
தற்போது அதே திட்டத்தை மோடி செயல்படுத்தி ரூ. 45000 கோடியை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியானது கருப்பு பணத்தை வெளியே கொண்டு வர உறுதுணையாக இருக்கும்.
ஆனால், இவ்விஷயத்தில் மோடி நடவடிக்கை சரியில்லை. பத்திரிக்கையாளர்கள் இதை திரித்து வெளியிடாதீர்கள்.
நாட்டில் 86 சதவீத ரெக்கம் ரூ.500, ரூ.1000 பணம்தான் என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். அதில் 4 சதவீதம்தான் உண்மையில் கருப்பு பணம். நடவடிக்கை சரியாக எடுக்காமல் 130 கோடி மக்களை தெருவில் அவர் நிறுத்தியுள்ளார்.
பொய்கூறி மக்களை ஏமாற்றும் மோடி, நாடாளுமன்றத்தில் பேசாமல் தவிர்த்து வருகிறார். தனது திட்டத்தை நாடாளுமன்றத்தில் தெரிவிக்கவே அவர் தைரியமாக இல்லை. மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டையே மோடி எரித்துள்ளார்.
காங்கிரஸ் - திமுக கூட்டணியானது ஓராண்டில் மத்தியில் ஆட்சியில் அமரும். அதற்கு மோடிக்கு நன்றி. ரூபாய் நோட்டு விவகாரத்தை திரும்ப பெறும் வரை புதுச்சேரியில் போராட்டம் தொடரும்.
அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தரவேண்டியுள்ளது. புது நோட்டுகள் இல்லை. எந்த பணம் தருவது என்பது கேள்வியாக உள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் அரசால் புதுச்சேரி சீரழிந்ததுபோல, இந்தியாவை மோடி சீரழித்து வருகிறார்" என்று தெரிவித்தார்.
போராட்டத்துக்கு தலைமை வகித்த புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில், "தொடர் போராட்டங்கள் நடத்த உள்ளோம்.
வரும் 28ம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு அனைத்து வட்டாரங்களிலும் காங்கிரஸார் போராட்டம் நடத்துவார்கள்" என்றார்.
போராட்டத்தில் அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன் மற்றும் எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT