Published : 15 Sep 2022 06:10 AM
Last Updated : 15 Sep 2022 06:10 AM
மதுரை: முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கான முதல்வரின் காலை சிற்றுண்டித் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் இன்று காலை தொடங்கி வைக்கிறார். மாலையில் விருதுநகரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்கிறார்.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குழந்தைகள் பயனடையும் வகையில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்தத் திட்டம் அண்ணாவின் 114-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று தொடங்கி வைக்கப்படுகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் மதுரை மாநகராட்சி ஆதிமூலம் தொடக்கப் பள்ளியில் இன்று காலை தொடங்கி வைக்கிறார்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மேயர் இந்திராணி, ஆட்சியர் அனீஸ் சேகர், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜீத் சிங் மற்றும் எம்எல்ஏ-க்கள், அரசுத் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
கட்சி விழாவில் பங்கேற்பு
அதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் காலை 11 மணிக்கு விருதுநகர் மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலக கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று கட்டுமானப் பணியைத் தொடங்கி வைக்கிறார். மதியம் ராம்கோ விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். மாலை 4 மணியளவில் பட்டம்புதூரில் நடக்கும் திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.
ஸ்டாலின் மதுரை வருகை
மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் நடைபெறும் அரசு மற்றும் திமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து நேற்று மதியம் 12.40 மணியளவில் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பி.மூர்த்தி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மேயர் இந்திராணி, முன்னாள் அமைச்சர் பொன்முத்துராமலிங்கம், எம்எல்ஏ தமிழரசி உள்ளிட்டோர் தலைமையில் திமுகவினர் வரவேற்றனர்.
விமானநிலையத்தில் இருந்து மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள விருந்தினர் மாளிகைக்குச் சென்ற முதல்வரை வழிநெடுக பொதுமக்கள், திமுகவினர் வரவேற்றனர்.
விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த முதல்வர் ஸ்டாலின் மதுரை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்ட அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். இரவு அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார்.
முதல்வர் வருகையையொட்டி மதுரையில் அவர் செல்லும் சாலைகள், நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் 2,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT