Published : 28 Nov 2016 05:36 PM
Last Updated : 28 Nov 2016 05:36 PM
புதுச்சேரியில் வங்கி மற்றும் ஏடிஎம்-களில் பணம் இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாயினர். இத்தகவல் அறிந்து முதல்வர் நாராயணசாமி சம்பவ இடத்துக்கு வந்து குறைகளை கேட்டறிந்து அதிகாரிகளிடம் விசாரித்தார்.
இரண்டு நாள் விடுமுறைக்கு பிறகு புதுச்சேரியில் இன்று வங்கிகள் திறக்கப்பட்டன. ஆனால் பெரும்பாலான வங்கிகளில் பணமில்லாத காரணத்தினால் வாடிக்கையாளர்கள் யாருமின்றி வெறிச்சோடி கிடந்தன.
கடந்த வாரம் டெல்லியிலும், இரு தினங்கள் முன்பு சென்னையிலும் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ரூ.500 நோட்டுகள் திங்கட்கிழமை புதுச்சேரியில் அறிமுகமாகும் என்று கூறப்பட்டது. ஆனால் புதுச்சேரிக்கு ரூ.500 நோட்டுகள் வரவில்லை.
புதுச்சேரியின் பிரதான எஸ்பிஐ வங்கியில் ஏடிஎம் மையம் திறந்திருந்தும், பணமில்லாததால் வந்து பார்த்து ஏமாற்றம் அடைந்து சென்றனர். வங்கியின் மற்ற சேவைகளுக்காக வந்த வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இந்நிலையில் வங்கி மற்றும் ஏடிஎம்களில் பணம் இன்றி மக்கள் அவதியுறுவதாக முதல்வர் நாராயணசாமிக்கு தொலைபேசி மூலம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து புதுச்சேரியின் பிரதான எஸ்பிஐ வங்கிக்கு சென்ற முதல்வர், ஏடிஎம் மையத்திற்கு சென்று பார்வையிட்டார். வரிசையில் நின்றோரிடம் குறை கேட்டார். அவர்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.
ஏடிஎம்கள் சரியாக இயங்கினால் பொதுமக்கள் எளிதாகப் பணம் எடுத்து சென்றிருப்பார்கள். அவை இயங்காததால் தான் வங்கிகளில் பல மணி நேரம் காத்து கிடக்கிறார்கள். பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் ஏடிஎம் மையங்களில் தட்டுப்பாடு இன்றி பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து முதல்வர் தனது வீட்டருகே உள்ள புஸ்சி வீதியில் உள்ள சிட்டி யூனியன் வங்கிக்கு நடந்தே சென்றார். அங்கு ஏடிஎம் முன்பு நீண்ட வரிசையில் மக்கள் நின்றிருப்பதைக் கண்டார். உடனடியாக அவர்களை சந்தித்துப் பேசினார். அங்கு ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இருப்பதாக அங்கிருந்தோர் தெரிவித்தனர். பின்னர் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வருகிறதா என்பதை அங்கிருந்தோரின் ஏடிஎம் கார்டு செலுத்தி ஆயிரம் ரூபாய் அங்கு எடுத்து உறுதி செய்தார்.
அதைத்தொடர்ந்து அவர் கூறுகையில், புதுச்சேரியில் 300-க்கும் மேற்பட்ட ஏடிஎம் மையங்களில் பணம் இல்லை. இதற்கு பிரதமரின் அவசர அறிவிப்பே காரணம்.புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ரொக்கமாக சம்பளம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT