Published : 15 Sep 2022 04:25 AM
Last Updated : 15 Sep 2022 04:25 AM
பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை பணிக்காக தோண்டி போடப்பட்ட மதுரை மாநகராட்சி சாலைகள் நிதியில்லாமல் புதிதாக அமைக்க முடியாமல் சிதிலம் அடைந்து காணப்படுகிறது.
மழை பெய்தாலே குடியிருப்புகள் தனித்தீவுகளாக மாறும் நிலையில் மக்கள் படும் துயரத்தை போக்க முதல்வர் சிறப்பு நிதி ஒதுக்குவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளில் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டப் பணியில் புதிய குடிநீர் விநியோகம் செய்யும் குழாய்கள் பதிக்கப்படுகின்றன.
அதுபோல், பாதாள சாக்கடை அமைக்கப்படாத வார்டுகளில் புதிதாக பாதாள சாக்கடை அமைக்கும் பணியும் நடக்கிறது. இந்த இரு பணிகளுக்காக குழாய்கள் பதிக்க டெண்டர் எடுத்த ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் மாநகராட்சி சாலைகளில் குழிகளை தோண்டி யுள்ளனர்.
அதனால், பெரும்பாலான வார்டுகளிலும் தார்ச் சாலைகள் முற்றிலும் உருக்குலைந்து காணப்படுகின்றன. மழை பெய்தாலே சாலைகள் சேறும், சகதியுமாக மாறி குடியிருப்புகள் தனித் தீவுகளாக மாறிவிடுகின்றன.
அதுபோல், பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் பணிகளுக்காக தோண்டாத சாலைகளும் பராம ரிப்பு இன்றி கற்கள் பெயர்ந்து இருசக்கர வாகனங்களில் வரும் பொதுமக்கள் வழுக்கி விழுந்து காயமடையும் நிலை உள்ளது.
இந்நிலையில் பாதாள சாக்கடை, பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் முடிந்த வார்டுகளில் ரூ.100 கோடியில் புதிய சாலைகள் அமைக்கும் பணி நடக்கிறது. இந்தச் சாலைகளையும் டெண்டர் எடுத்தவர்கள் தரமாக அமைக்காமல் குறுகலாக அமைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தற்போது கூடுதலாக ரூ.250 கோடியில் புதிய சாலைகளை அமைக்க மாநகராட்சி சார்பில் சிறப்பு நிதி கோரப்பட்டுள்ளது. அந்த நிதியை பெற்றுத் தருவதாக நிதியமைச்சர் பழனிவேல்தியாகராஜன் உறுதி அளித்துள்ளார்.
அதனால், விரைவில் மாநகராட்சியில் புதிய சாலைகள் அமைக்கப்படும் என எதிர்பார்க் கப்படுகிறது. ஆனால், தற்போது ரூ.100 கோடி ஒதுக்கப்பட்ட நிலையிலும் சிதிலமடைந்த சாலைகளை சில இடங்களில் புதிதாக அமைக்காமல் ‘பேட்ஜ் ஒர்க்' மட்டும் செய்து சமாளிக்கின்றனர்.
இவை மழைக்காலத்தில் மீண்டும் சிதிலம் அடைந்துவிடும் என்பதால் மாநகராட்சி நிதி விரயமாகும் நிலை உள்ளது. உதாரணமாக, மதுரை கே.கே.நகர் 80 அடி சாலை, கடந்த ஒராண்டுக்கும் மேலாக உருக்குலைந்து காணப்படுகிறது.
பொதுவாக, இதுபோன்ற சாலைகளில் முதல்வர்கள், முக் கிய அமைச்சர்கள் வரும்போது மட்டும் துரிதமாக சீரமைக்கப்படும் அல்லது புதிதாக அமைக்கப்படும். ஆனால், கடந்தவாரம் முதல்வர் இந்த சாலை வழியாகச் சென்றார்.
ஆனால் இந்த சாலையை புதிதாக அமைக்காமல் அவசர அவசரமாக குண்டு, குழி இருந்த இடத் தில் கிரஷர் மண்ணை நிரப்பி சமாளித்தனர். முதல்வர் சில நாட்களுக்கு முன்பு நெல்லையில் சுற்றுப் பயணம் செய்தார். அங்கு அவர் சென்ற சாலைகள் அவசர அவசரமாக புதிதாக அமைக்கப்பட்டன.
அந்த விழாவில் பங்கேற்ற பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், முதல்வர் அடிக்கடி நெல்லைக்கு வர வேண்டும். அவரது வருகையால் அனைத்து சாலைகளும் பழுது பார்க்க ப்படுகிறது. என்றார்.
ஆனால், மதுரையில் முதல்வர் சென்ற சாலையைக் கூட முழுமையாகச் சீரமைக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி உள்ளனர்.
இந்நிலையில், முதல்வரின் வருகையால், மாநகராட்சியில் மோசமான நிலையில் இருக்கும் சாலைகளுக்கு விமோசனம் கிடைக்குமா என மதுரை மக்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT